Published : 23 May 2024 05:43 PM
Last Updated : 23 May 2024 05:43 PM
சென்னை: கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடைபெறும் துணைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கடந்த 2002- ம் ஆண்டு முதல் 2021 - ம் ஆண்டு வரை 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. 2022 -ம் ஆண்டு முதல் அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் புதிய பாடத்திட்டத்தின் படி 10 பாடங்கள் 2 பருவமுறைகளாக நடத்தப்பட்டு வருகிறது. பழைய பாடத்திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாலும், தற்போது புதிய பாடத்திட்டம் துவங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாலும் பழையபாடத்திட்டங்கள் முடிவுகட்டப்பட உள்ளது.
எனவே, பழையபாடத்திட்டத்தின் படி 7 பாடங்களில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் துணைத் தேர்வு எழுதி அடுத்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெறலாம். வரும் 2025 டிசம்பர் மாதத்துக்குள் நடைபெறும் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள், இனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டத்தின் படி முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சிபெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே கூட்டுறவு மேலாண்மை பட்டயச்சான்றிதழ் வழங்கப்படும்.
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியினை பழைய பாடத்திட்டத்தில் முழுநேரம் அல்லது அஞ்சல் வழிபயின்று தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் துணைத் தேர்வுகள் எழுத உடனடியாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை 044-25360041 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT