Published : 20 May 2024 04:15 PM
Last Updated : 20 May 2024 04:15 PM
சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் தவிர மற்ற தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்புகளில், சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2024 - 2025-ம் கல்வி ஆண்டில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர, https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், ஏப்ரல் 22 முதல் மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்திருந்தது. அதன்படி 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே இத்திட்டத்தின் பயனாளிகள். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் கட்டணம் இல்லாமல் படிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத நிலை உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றி தமிழக அரசும் பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. அதற்கான அறிவிப்பு வெளியிட்டதோடு ஒதுங்கிவிட்டது.
எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மே 31-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
தமிழக அரசு தங்களுக்குச் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணமானது கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும், அப்படியே வழங்கினாலும் முழுமையாக வழங்காமல் தவணை முறையில் வழங்குவதாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்து, ஒரு கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் தான் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர முடியும்.
ஆனால் இப்போது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் அதில் தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கே எதிரானது.
எந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பது பெற்றோர்களின் அடிப்படை உரிமை. அதில் அரசு தலையிடக்கூடாது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இதுபோன்ற குறைபாடுகளை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். மே 31-ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT