Last Updated : 19 May, 2024 12:36 PM

 

Published : 19 May 2024 12:36 PM
Last Updated : 19 May 2024 12:36 PM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20% உயர்த்த பரிசீலனை

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருவதால், இந்தாண்டும் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மே 20) நிறைவு பெறுகிறது.

இதற்கிடையே கலை, அறிவியல் படிப்புகளில் சேர சமீப ஆண்டுகளில் மாணவர்களிடம் அதிகளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக ஆண்டுதோறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அரசுக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்தமுள்ள இடங்களை விட 2 மடங்கு கூடுதலாகும்.

இதை கருத்தில் கொண்டு சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதற்கான பரிந்துரை அறிக்கையை தயாரித்து அரசின் ஒப்புதல் பெற்று தேவைக்கேற்ப இடங்களை உயர்த்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. வழக்கம் போல் இந்தாண்டும் வணிகவியல், ஆங்கிலம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x