கோப்புப்படம்
கோப்புப்படம்

10, பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

Published on

சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதிய 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற நாளைக்குள் (மே 20) விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 10, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் திருப்தியில்லாதவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மே 20) நிறைவு பெறுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். எனினும், விடைத்தாள் நகல் கோருபவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒப்புகை சீட்டு முக்கியம்: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ள இயலும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.nic.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in