Last Updated : 17 May, 2024 04:15 PM

 

Published : 17 May 2024 04:15 PM
Last Updated : 17 May 2024 04:15 PM

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், பொது மாறுதலில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (மே 17) நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மாறுதல் கலந்தாய்வுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது எமிஸ் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமானது மே 25-ம் தேதி வரை ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும். அதேபோல், பொது மாறுதலில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x