Published : 16 May 2024 06:37 PM
Last Updated : 16 May 2024 06:37 PM

சென்னை ஐஐடியில் மே 20-ல் கலாச்சார திருவிழா தொடக்கம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் (Society for the Promotion of Indian Classical Music and Culture Amongst Youth- SPIC MACAY) 9-வது ஆண்டு சர்வதேச மாநாட்டை வரும் 20 முதல் 26-ந் தேதி வரை நடத்துகிறது.

ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் ஒன்று திரள்கின்றனர். இதில் பங்கேற்போர் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகள் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும சிறந்த கலைஞர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக அமையும்.

இந்நிகழ்ச்சிக்காக பதிவு செய்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மிகச்சிறந்த பாரம்பரியக் கலைகளை அதன் முழு சிறப்போடு ஒருவார காலம் நேரில் பார்வையிட வசதியாக இதில் பங்கேற்போருக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படும்.

இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “கலாச்சாரம்தான் ஒவ்வொரு நாட்டிற்கும் முதுகெலும்பாக இருக்கிறது. ஒரு நாடாக, இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படும் பல்வேறு கலாசார நடவடிக்கைகளால் நாம் பெருமைப்படுகிறோம். அவர்கள் அனைவரையும் SPICMACAY எங்கள் ஐஐடி வளாகத்திற்குக் கொண்டுவருகிறது. நிகழ்வுகளை எதிர்நோக்குகிறோம்” என தெரிவித்தார். இம்மாநாட்டை 1996, 2014 ஆகிய இரு ஆண்டுகளில் இக்கல்வி நிறுவனம் ஏற்கனவே நடத்தியுள்ளது.

நிகழ்ச்சி பற்றி பேசிய பேராசிரியர் சத்தியநாராயணன் என்.கும்மாடி, “இந்த நிகழ்வை சென்னை ஐஐடி மூன்றாவது முறையாக ஸ்பிக்மேகேயுடன் இணைந்து நடத்துகிறது. சுமார் 150 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், யுஜி, பிஜி மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் குழு இந்த நிகழ்வை சுமூகமாக நடத்துவதில் தீவிரமாக பங்கேற்கிறது. ஒரு வாரத்திற்கு செழிப்பான கலாச்சார விழாவை அனுபவிக்க சென்னை ஐஐடிக்கு இது ஒரு சிறந்த தளமாகும்” என குறிப்பிட்டார்.

பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள், கைவினைப் பட்டறைகள், திரைப்படங்களைத் திரையிடுதல், பாரம்பரியங்களைப் பார்வையிடுதல், அதிகாலை யோகாப் பயிற்சி, முழுமையான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணுதல் போன்றவை மாநாட்டின் அங்கங்களாக இடம்பெற உள்ளன.

இம்மாநாட்டின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த ஸ்பிக் மெக்கே அமைப்பின் தேசியத் தலைவரான ராதா மோகன் திவாரி, “இளைஞர்களின் இயக்கமாகத் தொடங்கிய ஸ்பிக் மெக்கே தனது 47 ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதில் சென்னை ஐஐடி மிகச் சிறந்த முறையில் பங்களிப்பை வழங்கி வருகிறது.

சென்னை ஐஐடி மற்றும் இதர ஆதரவாளர்களின் உதவியால்தான் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தங்குமிடம் முதல் உணவு, பட்டறைகள் என அனைத்தையும் இலவசமாக வழங்க முடிகிறது. இந்தியா முழுவதும் இருந்து கலந்துகொள்ளும் ஏறத்தாழ 1,300 பேருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு கலை வடிவத்தைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கவும் வாய்ப்பை வழங்குகிறோம். மாநாடு தனது நோக்கத்தை அடையும் வகையிலும், இளைஞர்களின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாகவும் அமையும் என நம்புகிறேன்” என்றார்.

ஸ்பிக் மெக்கேவின் துணைத் தலைவரான சுமன் டூங்கா கூறும்போது, “கலைஞர்கள், கல்வி நிறுவனங்கள், ஸ்பான்சர்கள், தன்னார்வலர்கள் என்ற நான்கு முக்கிய தூண்களைக் கொண்டு ஸ்பிக் மெக்கே செயல்பட்டு வருகிறது. புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி எங்களின் இயக்கத்திற்கு மிகப்பெரிய தூணாக உள்ளது. துடிப்பான கலாச்சாரக் காட்சிகளையும், பல்வேறு பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகளையும் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சென்னை ஐஐடி உடன் ஒத்துழைப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்பதோடு நீண்டகால கூட்டுமுயற்சியையும் விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

புதிய தலைமுறையினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரமம் போன்ற தனித்துவமான சூழலில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் இந்திய மற்றும் உலகப் பாரம்பரியத்தில் பொதிந்துள்ள உத்வேகத்தையும் ஆன்மிகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஸ்பிக் மெக்கேவின் முக்கிய நோக்கத்தை பிரதிபலிப்பதாகவே இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2030-க்குள் ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய வைப்பது இதன் குறிக்கோளாகும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இம்மாநாட்டின் முக்கிய ஆதரவாளராக செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஸ்பிக் மெக்கே அமைப்பு முதன்மையான இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டையும் போல இந்தாண்டு மாநாட்டிலும் மிகச் சிறந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இடம்பெற உள்ளனர். பண்டிட் ஹரி பிரசாத் சவுராசியா (இந்துஸ்தானி புல்லாங்குழல்), உஸ்தாத் அம்ஜத் அலிகான் (சரோட்), பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியம்), விதூஷி சுதா ரகுநாதன் (கர்நாடக இசை வாய்ப்பாட்டு), வித்வான் சேஷம்பட்டி டி.சிவலிங்கம் (நாதஸ்வரம்), விதூஷி அ.கன்னியாகுமாரி (கர்நாடக இசை வயலின்), பண்டிட் உல்லாஸ் கஷல்கர் (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), பண்டிட் எம்.வெங்கடேஷ் குமார் (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ்கான் (சித்தார்), விதூஷி சுனய்னா ஹசாரிலால் (கதக்), உஸ்தாத் வாசிபுதீன் (த்ருபத்), விதூஷி ஜெயந்தி குமரேஷ் (சரஸ்வதி வீணை), விதூஷி அஸ்வினி பிடே தேஷ்பாண்டே (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), ஸ்ரீ மார்கி மது சாக்யார் (கூடியாட்டம்), வித்வான் லால்குடி ஜிஜெஆர் கிருஷ்ணன் (கர்நாடக வயலின் இசை) உள்ளிட்ட கலைஞர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள்.

மாநாட்டையொட்டி தலைசிறந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் ஆகியோர் பங்குபெறும் ஐந்துநாள் பயிலரங்கு நடைபெற உள்ளது. வித்வான் நெய்வேலி சந்தானகோபாலனின் கர்நாடக வாய்ப்பாட்டு, டாக்டர் அலங்கார் சிங்கின் குர்பானி, குரு கோபிராம் புர்ஹா பகத்தின் சத்ரியா, விதூஷி சுனய்னா ஹசாரிலாலின் கதக், டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம், விதூஷி மாதவி முட்கலின் ஒடிசி நடனம், குமுச்சம் ரொமேந்திர சிங்கின் சோலோம், ஸ்ரீதாராபத ரஜக்கின் புருலியா சாவ், சுவாமி தியாகராஜன் அண்ட் சரஸ்வதியின் ஹத யோக், சுதீப் குப்தாவின் பொம்மலாட்டம், உஸ்தாத் வாசிபுதீனின் த்ரூபத் ஆகியவை நடைபெற உள்ளது.

ஸ்ரீ அசோக் குமார் பிஸ்வாசின் திக்குலி ஓவியம் (பீகார்), ஸ்ரீ பஜ்ஜு ஷியாமின் கோண்ட் பழங்குடியின ஓவியம் (மத்தியப் பிரதேசம்), ஜனாப் ஷாகிர் அலியின் முகலாய மினியேச்சர் ஓவியம் (ராஜஸ்தான்), ஜனாப் அப்துல் கஃபூர் கத்ரியின் ரோகன் கலை (குஜராத்), முகமூடி தயாரித்தல் (மஜுலி அசாம்), ஸ்ரீ வி.கே.முனுசாமியின் டெரகோட்டா (தமிழ்நாடு) போன்ற பல்வேறு வகையான கைவினைக் கலைகள் பயிலரங்கமும் நடைபெறும்.

ஸ்பிக்மெக்கே பற்றி: ஸ்பிக் மெக்கே என்பது 47 ஆண்டுகாலமாக இயங்கிவரும் தன்னார்வ அடிப்படையிலான அரசியல் சார்பற்ற, லாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தியப் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற கலைகள், தியானம், யோகா, சினிமா திரையிடல்கள், புகழ்பெற்ற நபர்களின் உரைகள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பார்வையிடுதல், பல்கலைக்கழகம் முதல் பள்ளி மாணவர்களுக்கு கைவினைப் பட்டறைகளையும் ஏற்பாடு செய்கிறது.

இந்தியப் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அதில் இருக்கும் மதிப்புமிக்க அம்சங்களை அறிந்துகொள்ளவும் ஊக்குவிப்பதன் மூலம் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே முறையான கல்வியின் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 100 நகரங்களில் ஆண்டுதோறும் சுமார் 5,000 நிகழ்ச்சிகளை அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x