Published : 16 May 2024 02:54 PM
Last Updated : 16 May 2024 02:54 PM
சென்னை: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த மே 6-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும் வெளியானது. இந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களில் பிளஸ் 2 தேர்வில் 94.56 சதவீதமும், எஸ்எஸ்எல்சி.யில் 91.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை பிளஸ் 2-வில் 397 ஆகவும், பத்தாம் வகுப்பில் 1,364 ஆகவும் சென்ற ஆண்டைவிட உயர்ந்துள்ளது.
மொத்தம் 1,761 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது வரலாற்று சாதனையாகும். இது பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல்லாகும். அதன்படி 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், உயர் அலுவலர்களை அழைத்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதல் முறையாக சீர்மிகு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர். இதுதவிர விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், 100 சதவீதம் தேர்ச்சியை எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது அவர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் எட்டவும் வழிவகை செய்யும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT