Last Updated : 16 May, 2024 01:41 PM

1  

Published : 16 May 2024 01:41 PM
Last Updated : 16 May 2024 01:41 PM

EMIS: பள்ளிக் கல்வித் துறை - பெற்றோர் உடனான தகவல் தொடர்பு முயற்சியில் சிக்கல்

கோப்புப்படம்

விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் ஒவ்வொரு மாணவரின் பிறந்த தேதி, வகுப்பு, மதிப்பெண்கள், சான்றிதழ்கள், பெற்றோரின் தொலைபேசி எண், கற்றல் மதிப்பீடு, கற்பித்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பிட்ட இடைவெளியில் புதிய கற்றல் செயல்பாடுகள் மூலம் எமிஸ் தகவல்கள் ‘அப்டேட்’ செய்யப்படும். தற்போது எமிஸ் இணையதளத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சுமார் 1.16 கோடி தொலைபேசி எண்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே பயனற்ற எண்களை நீக்கி, புதிய எண்களை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இதற்காக ஆசிரியர்கள் பெற்றோரைத் தொடர்பு கொள்ளும் போது, இதற்கான ஓடிபி எண்ணை பெற்றோர் தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணியில் உள்ள சிரமங்கள் மற்றும் இம்முயற்சி குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, “வங்கிகளின் பெயரை சொல்லி நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க சைபர் க்ரைம் போலீஸார் கொடுத்த விழிப்புணர்வால் ஓடிபி எண்ணை பெற்றோர் தெரிவிக்க மறுக்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்குச் சென்று அவர்கள் முன்னிலையில்தான் பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் உடன் இணைப்பு ஏற்படும். இதற்காக ‘Department of School Education’ என்ற பெயரில் புதிய தளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இதில் வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

ஒருமுறை ஒரு தகவலை அனுப்பினால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்புக்கும் அந்தத் தகவல் சென்றடைந்து விடும். இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெற்றோர் உடனான தகவல் தொடர்பு மிகவும் எளிமையாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x