Published : 11 May 2024 04:44 AM
Last Updated : 11 May 2024 04:44 AM

விரைவில் 10-ம் வகுப்பு துணை தேர்வு: கால அட்டவணை இன்று வெளியாகிறது

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மற்றும் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், ஓர் ஆண்டு வீணாகாமல் தவிர்க்கும் வகையிலும் துணை பொதுத் தேர்வை ஜூலை 2-ம் தேதி முதல் நடத்த தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் வரும் கல்வி ஆண்டிலேயே மேல்நிலைக் கல்வியில் சேர முடியும். இதற்கான தேர்வுக் கால அட்டவணை இன்று (மே 11) வெளியிடப் படுகிறது.

பொதுத் தேர்வு எழுத 32,348 தனித் தேர்வர்கள் பதிவு செய்த நிலையில், 30,112 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்மற்றும் அவர்களது பெற்றோர் அரசின் இலவச உதவி மையத்தை104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனை வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிக்கல்வி துறையின் 14417 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, அடுத்தகட்ட கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

அரசுப் பள்ளிகள் முன்னேற்றம்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டைவிட (3,718) அதிகம். அதேபோல, 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை கடந்த 2022-ல் 886, கடந்த 2023-ல் 1,026, தற்போது 1,364 என தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

100-க்கு 100: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 20,691 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், தமிழில் 8 பேர், ஆங்கிலத்தில் 415 பேர், அறிவியலில் 5,104 பேர், சமூக அறிவியலில் 4,428 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மொத்த பாடங்களிலும் சென்ற ஆண்டு 7,642 பேர் மட்டுமே முழு மதிப்பெண் எடுத்திருந்தனர். நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 30,646 ஆக அதிகரித்துள்ளது. கணிதத்தில் முந்தைய ஆண்டு 3,649 மாணவர்களே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த நிலையில், இம்முறை 20,691 பேர் அந்த சாதனையை படைத்துள்ளனர்.

ஆளுநர், முதல்வர் வாழ்த்து: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: கல்விப்பயணத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் வேளையில், தங்களது விருப்பங்களை உறுதியுடன் தொடரவும், அவற்றைப் பிரதிபலிக்கும் பாடங்களைத் தேர்வு செய்யவும் மாணவர்களை வலியுறுத்துகிறேன். அனைத்து மாணவர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவர்களே, உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள். மேல்நிலைக் கல்வி, தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், உங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, 12-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜிகே வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x