Published : 09 May 2024 03:58 AM
Last Updated : 09 May 2024 03:58 AM
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நாளை (மே 10) வெளியிடுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது.9.08 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 88 முகாம்களில் நடைபெற்றது. அதன்பிறகு, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவு விவரம் அனுப்பப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ போன்ற கல்வி வாரியங்களை தொடர்ந்து, தமிழக தேர்வுத் துறையும் பொதுத் தேர்வு முடிவுகளை ‘டிஜிலாக்கர்’ தளம் வழியாக அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இனி பொதுத் தேர்வு முடிவுகளை results.digilocker.gov.in எனும் வலைதளம் வழியாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். அதன்படி, முதல் முறையாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், டிஜிலாக்கரிலும் நாளை வெளியாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT