Published : 09 May 2024 05:16 AM
Last Updated : 09 May 2024 05:16 AM
சென்னை: உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ் புதல்வன்’திட்டம், வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான ‘கல்லூரி கனவு - 2024’ நிகழ்ச்சி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, நாகை மாவட்டங்களில் நேற்று நடத்தப்பட்டது.
இதில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்தகட்டமாக என்ன படிக்கலாம், எந்தெந்த துறைகளில் அதற்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பொறியியல், கலை - அறிவியல், சட்டம், மருத்துவம் , பாலிடெக்னிக், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற துறைகளில் உள்ளபடிப்புகள் குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு கையேடுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வையொட்டி, பல்வேறுகல்வி நிறுவனங்கள் சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக மாணவர்களை உலக அளவிலான சாதனையாளர்களாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாணவரின் கல்வி மற்றும் தொழில்சார் கனவுகள்நிறைவேற, தமிழக அரசின் ‘நான்முதல்வன்’ திட்டம் உதவியாக இருந்து வருகிறது. பள்ளிகளில் ‘காலை உணவு திட்டம்’ செயல்படுத்துவதன் மூலம், நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் இருந்து வருகிறது.
கல்விதான் சிறந்த முதலீடு. அதை யாரும் எடுக்கவோ, பறிக்கவோ முடியாது. இந்த முதலீடுதான் கடைசி வரை உங்களுடன் இருக்கும். எனவே, அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள்லட்சியங்களை அடைய வேண்டும்.நீங்கள் அனைவரும் விஞ்ஞானிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், தொழில் முனைவோர் ஆக முடியும். அதற்கேற்ப உயர்கல்வியை பெற்று வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘உயர்கல்வியை பொருத்தவரை, தமிழகத்தில்தான் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகம். அதேநேரம், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் பேரையும் உயர்கல்வியில் சேர்ப்பதுதான் நமது நோக்கம். அந்த வகையில்தான் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உயர்கல்வியில் சேராமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களையும் படிக்க வைக்க குழு அமைக்கப்பட உள்ளது. மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதால், 20-25 சதவீதம் பேர் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இந்த கல்வி ஆண்டிலேயே வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களை சரியாக கொண்டு செல்லும்போது மாணவர் சேர்க்கை மேலும் உயரும்’’ என்றார்.
இந்த நிகழ்வில் முதல்வரின் தனி செயலர் முருகானந்தம், பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன், தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT