Published : 08 May 2024 02:39 PM
Last Updated : 08 May 2024 02:39 PM
உலக நாடுகள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பக்கம் திரும்பி பார்க்கிறது. ஆரோக்கியமான இல்லம், ஆரோக்கியமான உலகத்தை உறுதி செய்ய பாரம்பரிய மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதில், ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதில் யோகா மற்றும் நேச்சுரோபதி படிப்புக்கு (பி.என். ஒய்.எஸ்.) மட்டும் நீட் தேர்வு எழுத தேவையில்லை. இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள பி.ஏ. எம்.எஸ். (ஆயுர்வேதம்), பி.எஸ். எம்.எஸ். (சித்த மருத்துவம்), பி.ஹெச்.எம்.எஸ். (ஹோமியோபதி), பி.யு.எம்.எஸ். (யுனானி) ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண் பெற வேண்டும்.
தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு 6 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி உள்ளன. ஆயுர்வேதம் படிப்புக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி உள்ளது. யுனானி படிப்புக்கு சென்னையில் கல்லூரி உள்ளது. ஹோமியோபதி படிப்புக்கு மதுரையிலும், யோகா மற்றும் நேச்சுரோபதி படிப்புக்கு சென்னையிலும் அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர 20 சுயநிதி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சித்த மருத்துவப் படிப்புக்கு தமிழ் பாடம் படித்திருக்க வேண்டும். யுனானி படிப்புக்கு உருது படித்திருக்க வேண்டும். சுமார் 5.5 ஆண்டு படிப்பில் முதல் 4.5 ஆண்டு கல்லூரியிலும், அடுத்து ஓராண்டு உள்தங்கு பயிற்சி மருத்துவக் கல்லூரிகளில் பெற வேண்டும்.
பிளஸ் 2-வில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) பாடங்களை எடுத்து படித்த மாணவர்கள் நீட் தேர்வு அடிப்படையில் அரசு கல்லூரிகளிலும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், நிர்வாக பிரிவு இடங்களில் சேரலாம். அரசு கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் மிகவும் குறைவு. சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலும், நிர்வாகப் பிரிவு இடங்களில் ரூ.2.50 லட்சம் செலுத்த வேண்டும்.
ஆயுஷ் மருத்துவப் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை கிடைக்கிறது. விடுதி வசதியும் கிடைக்கும். ஆயுஷ் மருத்துவப் படிப்புகளை படிப்பவர்கள் அவரவர் ஊர்களிலேயே மருத்துவ மையங்கள், மருத்துவமனை தொடங்கலாம். நலவாழ்வு மையங்களை தொடங்கலாம். ஆலோசகராகவும் செயல்படலாம். இயற்கை மருத்துவம் தொடர்பான மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களை தயாரித்து தொழில்முனைவோர் ஆகலாம். எம்.டி. மற்றும் பி.எச்டி. ஆய்வு படிப்பு படிக்கலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT