Published : 08 May 2024 06:02 AM
Last Updated : 08 May 2024 06:02 AM
சென்னை: செயற்கை நுண்ணறிவும், இணைய பாதுகாப்பும் இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத தேவையாகியுள்ளது என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழி நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்துவழங்கின.
கடந்த சனிக்கிழமை (மே 4) மாலை நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 6-வது தொடர் நிகழ்வில் ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி & கிளவுடு கம்ப்யூட்டிங் துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
சென்னை விஐடி, ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினீயரிங் மூத்த அசோசியேட் புரஃபசர் டாக்டர் என்.கணேஷ்: செயற்கை நுண்ணறிவின் தேவையென்பது இன்றைக்கு எல்லா இடங்களிலும் வந்துவிட்டது. ஹெல்த் கேர் இண்டஸ்ட்ரி, ஃபைனான்ஸ் செக்டர், சைபர் செக்யூரிட்டி, என்டர்டெயின்மென்ட், மீடியா லைன் என அனைத்து இடங்களிலுமே ஆட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் களமிறங்கி உள்ளது.
பெங்களூரு சி-டாக் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்டி.சுதர்சன்: உலகமே டிஜிட்டல் மயமாகியுள்ள இன்றைய சூழலில் சைபர் செக்யூரிட்டியின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எந்த ஒரு இடத்திலும் ஒரு பொருளை நாம் பயன்படுத்துபோது அதன்மீது நம்பிக்கை கொள்வதென்பது பெரும் சவாலாக உள்ளது. அத்தகைய நம்பிக்கையை தருவதும், நமக்கான பாதுகாப்பை வழங்குவதுமே இணைய பாதுகாப்பாகும்.
நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: மனிதர்களுக்கு மட்டுமே கைவந்த கலையான கற்றுக்கொள்வதையும், சிந்திப்பதையும் எந்திரங்களுக்குள் புகுத்துவதே ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் ஆகும். ஆன்லைன் பரிவர்த்தனை, ஆன்லைன் ஷாப்பிங், இ லேர்னிங், சோஷியல் மீடியா என பலவற்றின் வழியாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில் சைபர் செக்யூரிட்டியின் பணி முக்கியமானதாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE06 என்ற லிங்க்கில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment