Published : 08 May 2024 04:37 AM
Last Updated : 08 May 2024 04:37 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணை தேர்வு: ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை நடக்கிறது

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மே 16 முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 3, 4-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுக்கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாகஅமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இதேபோல், பிளஸ் 1 துணைத் தேர்வுகள் ஜூலை2 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு...: தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து விதமான தனியார் பள்ளிகளும் வெற்றி வாய்ப்பை தவறிவிட்ட மாணவர்களை அழைத்து பேசி, தேர்வுத் துறையால் நடத்தப்பட உள்ள உடனடி சிறப்பு துணை தேர்வில் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். மே, ஜூனில் நடக்க உள்ள மாதாந்திர ஆய்வு கூட்டத்திலும் இதுபற்றி ஆராய வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து விதமான தனியார் பள்ளி முதல்வர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x