Published : 07 May 2024 11:03 AM
Last Updated : 07 May 2024 11:03 AM
திருப்பூர்: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர், அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 வகுப்பில் 479 மதிப்பெண் பெற்றார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக்கவுண்டன்வலசு சக்திநகரை சேர்ந்தவர் திருவருட்செல்வன் ( 17 ). இவரது பெற்றோர் புகழேந்திரன், மாலதி ஆகியோர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். பெற்றோரை இழந்த திருவருட்செல்வனும், அவரது சகோதரி லாவண்யாவும், தாய்மாமா வேல் முருகன் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர்.
திருப்பூர் பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் வேல்முருகன், தனது சொற்ப வருவாயைக் கொண்டு இருவரையும் படிக்கவைக்கிறார். லாவண்யா காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு படித்து வருகிறார். கெட்டிச் செவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவருட்செல்வன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘பெற்றோர் இல்லாத நிலையில் தாய்மாமா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரவுடன் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். விமான தொழில் நுட்பம் படித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. குடும்பத்தின் சூழ்நிலை அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும், தொடர்ந்து பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. பெற்றோரை இழந்த நிலையில், என் கல்விக்கும், சகோதரியின் கல்விக்கும் அரசு உதவ முன்வர வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT