Published : 05 May 2024 04:50 AM
Last Updated : 05 May 2024 04:50 AM
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்திவருகிறது.
அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று நடக்கிறது. இந்த தேர்வை தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதவுள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவுரைகள் வருமாறு:
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஹால்டிக்கெட்களில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்லும் வகையில் திட்டமிட வேண்டும். தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும்.
அதன்பிறகு, வருகை தரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி கிடையாது. தேர்வர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
தேர்வு மையங்களுக்குள் பேப்பர், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ்கள், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment