Published : 01 May 2024 05:17 AM
Last Updated : 01 May 2024 05:17 AM
சென்னை: பொறியியல் துறையில் புதுமையான சிந்தனைகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ்திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை, ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 3-வது தொடர் நிகழ்வில் ‘மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் அலைடு இன்ஜினீயரிங் ஸ்டிரீம்ஸ் துறையில் உள்ள வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் துறை சார் வல்லுநர்கள் பேசியதாவது:
திருச்சி என்ஐடி புரொடக்ஷன் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர்எம்.துரைசெல்வம்: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் ஆகியவற்றின் தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால்,வேலைவாய்ப்புகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும். மற்றொரு நேரத்தில் சற்று குறைவாக இருக்கும். பொறியியல் துறையில் புதுமையான சிந்தனைக்கு நல்ல எதிர்காலம் உண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொண்டால், அவர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திருவள்ளூர் கேட்டர்பில்லர் இந்தியா நிறுவன பொதுமேலாளர் (ஆபரேஷன்ஸ்) என்.அன்புசெழியன்: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் என்பது அடிப்படையான பொறியியல் துறையாகும். அறிவியல் துறையின் பயன்பாட்டுக்கூடமாக விளங்குவது பொறியியல் துறையே. இயற்பியல், வேதியியல், கணிதத்தின் பயன்பாடுதான் இன்ஜினீயரிங் துறையாகஉள்ளது. இத்துறை எல்லோருக்கும் முன்னேற்றத்தை வழங்கக்கூடியது. நவீன அறிவியல் யுகத்தில் மெக்கானிக்கல் துறை உருமாறி இருக்கிறதேயொழிய, உருக்குலைந்து போய்விடவில்லை.
நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: இயந்திரப் பொறியியல் துறை நம் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்திவரும் துறையாகும். பல் துலக்கும் டூத்பேஸ்ட் முதல் மின்விசிறி, தொலைக்காட்சி என பல்லாயிரம் பொருட்களை உற்பத்தி செய்துதருவது இயந்திரப் பொறியியல் துறையும், அது சார்ந்த தொழிற்சாலைகளும் என்பதை மறுக்க முடியாது. நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப் பெரிய பங்காற்றிவரும் இயந்திரப் பொறியியல் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.
நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதிலளித்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE03 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, நிகழ்வைப் பார்த்துப் பயனடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT