Published : 27 Apr 2024 06:15 AM
Last Updated : 27 Apr 2024 06:15 AM
சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான 330 அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்விஇயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறையின்கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு வட்டாரக்கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் வகையில், தகுதி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டு 2011 டிச.31-ம் தேதிக்கு முன்னர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த 330 நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதும் இருப்பின் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மாற்றம் ஏதுமில்லை எனில் அதன் விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும், பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இருப்பின் அதுசார்ந்த தகவலையும் உடனே இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT