Published : 25 Apr 2024 08:26 AM
Last Updated : 25 Apr 2024 08:26 AM

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 3 பெண் ஊழியர்கள் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சுபாஷினி, நித்யா, இந்திரா பிரியதர்ஷினி.

திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் திருப்பூர் ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர்கள் 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி ( 26 ). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித் தேர்வுக்கான படிப்பையும் கை விடாது படித்துவந்த இவர், தற்போது தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடத்தில் தேர்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார்.

இவரது தந்தை காளியப்பசாமி. விவசாயி. தாய் உமா மகேஸ்வரி. தம்பி, தங்கை உள்ளனர். சுபாஷினி கூறும்போது, “வேலைக்கு சென்றுவந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. நான் வெற்றி பெற்றதை பார்த்து என் தங்கை போட்டித் தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்” என்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி ( 28 ). பிஎஸ்சி வேளாண்மை படித்தவர். மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர், தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தொடர்ந்து குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்திரா பிரியதர்ஷினி கூறும்போது, “வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் குரூப் 1 தேர்வுக்கு படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றிபெற்றுள்ளேன்” என்றார். இவரது தந்தை கேசவன். காலணி வியாபாரம் செய்து வருகிறார். தாய் ரேகா தேவி செஞ்சேரிப்புதூர் அரசுப் பள்ளி ஆசிரியை.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா ( 26 ). பிஎஸ்சி வேளாண்மை படித்தவர். இவர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று இள நிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, வேளாண்மை அலுவலராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தற்போது குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

இவரது தந்தை விவசாயி பழனிசாமி. தாய் பழனியம்மாள். நித்யா கூறும்போது, “தமிழ்நாட்டில் குரூப் 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகிறோம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் தேங்கவில்லை. எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 வெற்றிக்கு மிக முக்கிய காரணம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x