Published : 23 Apr 2024 04:12 AM
Last Updated : 23 Apr 2024 04:12 AM
கோவை: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனில் நன்கு படிப்பதுடன், கடினமாக உழைக்க வேண்டும் என ஐஏஎஸ் தேர்வில் பெற்ற மாணவி க.சத்யாநந்தி தெரிவித்தார்.
கோவை அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், கோவை நஞ்சப்பா சாலையில் கடந்த 16 ஆண்டுகளாக ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இங்கு படித்த மாணவி க.சத்யாநந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் 513-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு, கனகராஜ் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் கனகராஜ் மாணவியைப் பாராட்டி பேசினார்.
இதைத்தொடர்ந்து, மாணவி க.சத்யாநந்தி, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளிடம் பேசியதாவது: எனது தந்தையின் பெயர் கணேசன். தாயார் பெயர் சூரிய பிரபா. நான் துடியலூரில் உள்ள வித்யா விகாஸ் பள்ளியில் படித்தேன். பின்னர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றேன். கனகராஜ் இலவச பயிற்சி மையத்தில் இரண்டு ஆண்டுகள் தேர்வுக்கு தயாராகி வந்தேன்.
இங்கு பொது அறிவு பாடத்தை பயின்றேன். இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ) குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனில் நன்கு படிக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும். பரந்த, விசாலமான அறிவும் நேர்மறையான அணுகுமுறையும் அவசியமாகும். சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வில் பொது அறிவுத்தாள், திறனறிவு தாள் என இரண்டு தாள்கள் உள்ளன.
பொறியியல் அல்லாத மாணவர்களுக்கு, முக்கியமாக கலை அறிவியல் பட்டம் படித்த மாணவர்களுக்கு திறனறிவு தாள் பெரிய சவாலாக உள்ளது. இது ஒரு தகுதி காண் தாளாக இருந்த போதிலும் மிக முக்கிய, கடினமான தாளாக மாறி உள்ளதால் போட்டியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வில் போட்டியாளர்கள் ஆழமாக பாடங்களைப் பயில வேண்டும். விருப்ப பாடங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாடங்களை புரிந்து படிப்பது அவசியமாகும். மூன்றாம் கட்ட தேர்வாகிய நேர்காணலில் ஆளுமைத் திறன் மற்றும் நேர்மறை அணுகுமுறைகள் மதிப்பிடப்படுகின்றன. போட்டியாளர்கள் நேர்மையுடன், தன்னம்பிக்கையுடன் பதில் அளிக்க வேண்டும். நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT