Published : 22 Apr 2024 05:32 AM
Last Updated : 22 Apr 2024 05:32 AM

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க எம்பிபிஎஸ் முடித்தவர்கள் ஆர்வம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு, எம்பிபிஎஸ் முடித்தவர்கள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் தேர்வில்தகுதி பெறுவர்களை கொண்டுநிரப்பப்படுகின்றன. இத்தேர்வைதேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துகிறது. அதேபோல, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எஞ்சிய 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு 2024-25 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த 16-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில்ஜூன் 23-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது https://nbe.edu.in மற்றும் https://www.natboard.edu.in ஆகிய இணையதளங்களில் கடந்த 16-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. மே 6-ம் தேதி இரவு 11.55 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 18-ம் தேதி ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூலை 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படித்து முடித்தவர்கள் இத்தேர்வுக்கு ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்யும் எம்பிபிஎஸ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x