Published : 17 Apr 2024 05:18 AM
Last Updated : 17 Apr 2024 05:18 AM
சென்னை: இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர்மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கைவிவரம்:
யுஜிசி சார்பில் ஆண்டுதோறும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்படஅனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன. இதன்மூலம் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய முடிகிறது. மேலும், தரமான கற்பித்தல்-கற்றல் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
2-ம் ஆண்டு மாணவர்கள்: அதன்படி வரும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தொழில் சாராத படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் வகுப்புகள் தொடங்க வேண்டும். 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 3-வது வாரத்துக்குள் கல்லூரிகள் திறக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதேபோல், தொழிற்சார்ந்த படிப்புகளில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வியாண்டு நாட்காட்டியை தயாரிக்க வேண்டும். அந்த நாட்காட்டி அடிப்படையில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு யுஜிசி செயலர்மணிஷ் ஆர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT