Published : 05 Apr 2024 05:51 AM
Last Updated : 05 Apr 2024 05:51 AM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் வினா தாள் கடினம்: தேர்ச்சி குறையும் என அச்சம்

சென்னை: பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், மாணவர்கள் தேர்ச்சிகுறையக்கூடும் எனவும் ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அறிவியல் பாடத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.07 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில் அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அதிர்ச்சிதெரிவித்துள்ளனர். அனைத்துபகுதிகளிலும் பெரும்பாலானவை எதிர்பாராத வினாக்களாக இருந்தன. வழக்கமாக இடம் பெறும்கேள்விகள் 25 சதவீதம் அளவுக்குகூட இந்த வினாத்தாளில் இல்லைஎன்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிவியல் ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொருபாடப்பகுதியிலும் முக்கியமானதாக மாணவர்களுக்கு குறித்து கொடுத்த ஒரு கேள்வி கூட வினாத்தாளில் இடம்பெறவில்லை. ஒருமதிப்பெண் உட்பட அனைத்து பகுதிகளிலும் புதிய வடிவிலான வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. அதற்கு நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பதிலளிக்க சிரமப்பட்டனர். மெல்ல கற்கும் மாணவர்களை கருத்தில் கொள்ளாமல் இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர் தேர்ச்சி குறைவதுடன் சென்ட்டம் எண்ணிக்கையும் பெருமளவு சரியும்’’ என்றனர்.

இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்ற பாடங்களை ஒப்பிடுகையில் தொடர்ந்துஅறிவியல் வினாத்தாள் மட்டும் கடினமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிற பாடங்களை போல் அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்றவேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.இது அறிவியல் பயில விரும்பும்மாணவர்களின் விருப்பத்தை சிதைக்கும் செயலாகும் எனவும் கல்வியாளர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

சமூக அறிவியல் பாடத்தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகிறது. மேலும், தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x