Published : 03 Apr 2024 05:57 AM
Last Updated : 03 Apr 2024 05:57 AM

இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர 22 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத காலி இடங்கள் விவரம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப்படும். இதில் சேர்க்கை பெற 22-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரும், இலவச கட்டாயகல்வி உரிமை சட்ட மாநிலமுதன்மை தொடர்பு அதிகாரியுமான எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதில், வரும் கல்வி ஆண்டுக்கான (2024-25) மாணவர் சேர்க்கை பணிகளை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 25 சதவீத இடங்கள் கணக்கிடப்பட்டு அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் எமிஸ் தளத்தில் ஏப்ரல் 10-ம்தேதி வெளியிடப்படும். www.tnemis.tnschools.gov.in இணையதளத்திலும் அன்றைய தினமே பள்ளிகள் வாரியாக இடங்களின் எண்ணிக்கை வெளியிடப்படும். பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளியின் தகவல் பலகையிலும் இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம்,வட்டார வள மைய அலுவலகங்களில் செய்ய வேண்டும்.

குலுக்கல் முறையில் சேர்க்கை: எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021 தேதிக்குள்ளும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்ப பரிசீலனையை மே 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை நடத்த வேண்டும்.

சேர்க்கைக்கு தேர்வானோர், காத்திருப்போர் விவரம் ஆகியவற்றை மே 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சேர்க்கைக்கு தேர்வான குழந்தைகளின் பெற் றோருக்கு குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x