Published : 30 Mar 2024 06:30 AM
Last Updated : 30 Mar 2024 06:30 AM
சென்னை: சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பங்கேற்க உயர்கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மாணவர்களிடையே சைபர் க்ரைம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வரும் முதல் புதன்கிழமையில் சைபர் விழிப்புணர்வு நாளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி ‘இணைய சுகாதாரம்’ என்ற தலைப்பில் 1 மணி நேரத்துக்கான இணையவழி கருத்தரங்கை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஏப்.3-ம் தேதி (புதன்கிழமை) இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் மூலம் மதியம் 2 முதல் 3 மணி வரை இணையவழி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இணையவழி சுகாதாரத்தைப் பேணுவதற்கும், ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான அத்தியாவசிய நடைமுறைகள் குறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு கற்பிப்பதை இந்த கருத்தரங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சைபர் க்ரைம் அச்சுறுத்தல்கள் மற்றும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மாணவர்களிடையே வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.
எனவே உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி கருத்தரங்கம் குறித்த தகவல்களை பரப்பி https://www.youtube.com/@UGC_India/featured மற்றும் https://twitter.com/ugc_india என்ற இணையதளங்களில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT