Published : 27 Mar 2024 05:39 AM
Last Updated : 27 Mar 2024 05:39 AM
சென்னை: பத்தாம் வகுப்புக்கான தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டு நிறைவடைந்தது.
இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.08 லட்சம் மாணவர்கள் எழுதவிருந்தனர். இவர்களில் 16,314 பள்ளி மாணவர்கள், 1,319 தனித் தேர்வர்கள் என மொத்தம் 17,633 பேர் நேற்று தேர்வெழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னை மாவட்டத்தில் மட்டும் 288 மையங்களில் 66 ஆயிரம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற்ற சுமார் 4,000 மொழி சிறுபான்மைமாணவர்கள் கன்னடம், மலையாளம் உட்பட போன்ற பிறமொழிகளில் தேர்வெழுதினர். இதற்கிடையே தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வினாத்தாளில் ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டன. மற்றபடி இத்தேர்வில் சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 8-ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைய உள்ளன. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
வினாத்தாளில் எழுத்துப் பிழையால் மாணவர்கள் குழப்பம்
மதுரை: தமிழகத்தில் நேற்று தொடங்கிய தமிழ் மொழிப் பாடத் தேர்வுக்கான வினாத் தாளில் பகுதி 111-ல் பிரிவு 2-ல் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் என்ற பகுதியில் 33-வது வினாவில், “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்று வினா இருந்தது.
இதில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதிலாக தவறுதலாக ‘பண்ணியிருந்த’ என இருந்தது. இதனால் மாணவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். பின்னர் எழுத்துப்பிழை என்பதை அறிந்து விடையளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT