Published : 15 Mar 2024 04:10 PM
Last Updated : 15 Mar 2024 04:10 PM

7 மாநிலங்கள், 50,000 அரசுப் பள்ளிகள் - அறிவியலை பிரபலப்படுத்த சென்னை ஐஐடி இலக்கு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), அறிவியலைப் பிரபலப்படுத்தும் முன்முயற்சியின் வாயிலாக 2026-ம் ஆண்டுக்குள் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 50,000 அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதலை வழங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: அறிவியலைப் பிரபலப்படுத்தும் முன்முயற்சியின் வாயிலாக 2026-ம் ஆண்டுக்குள் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 50,000 அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதலை வழங்கவும் சென்னை ஐஐடி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சென்றடைந்துள்ள இத்திட்டத்தின் மூலம், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 3,20,702 மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகள் தொடர்பான தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு 3,20,702 புத்தகங்களை இக்கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் -https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html

சென்னை ஐஐடி பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். உயர்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளை இலக்காகக் கொண்டு ஏறத்தாழ 70 பிரபலமான அறிவியல் புத்தகங்களை பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி தெலுங்கில் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ளார்.

இதுபோன்ற முன்முயற்சிகளின் அவசியம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி கூறும்போது, “சிக்கலான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அணுகக் கூடிய ஒரு பாலமாக ‘பாப்புலர் சயின்ஸ்’ அமைந்துள்ளது. அறிவியல் பின்னணி அற்ற தனிநபர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டு அவற்றின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் பாராட்ட வழிவகுக்கிறது.

9,193 கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளைச் சென்றடைந்து 3,20,702 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம் எனக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வரை வழங்கியிருக்கிறோம். சென்னை ஐஐடி-க்கும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களுக்கும், இதற்காக ஆதரவை வழங்கி உறுதுணையாக இருந்துவரும் நன்கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து, எங்கள் முயற்சியில் பங்கேற்கும் மாணவர்கள் - ஆசிரியர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள், மின்னஞ்சல்களைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது. எங்களின் தற்போதைய செயல்பாடுகள் ஒரு தொடக்கம்தான்” எனத் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகள்:

* பிரபலமான அறிவியல் புத்தகங்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

* பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குதல்

* அறிவியல் சோதனைகள், ஊக்கமளிக்கும் வகுப்புகள் மூலம் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துதல்

சென்னை ஐஐடி மற்றும் அதன் சிஎஸ்ஆர் பங்களிப்பாளர்களின் நிதியுதவியுடன், பேராசிரியர் வி.ஸ்ரீனிவாசஸ் சக்ரவர்த்தி மற்றும் அவரது குழுவினர் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு பிரபல அறிவியல் புத்தகங்களை இலவசமாக வெளியிட்டு வழங்கியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளாக இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் போத்பிரிட்ஜ் (BothBridge) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த அளவீட்டுக் கருவியின் மூலம், பள்ளி மாணவர்கள் ‘மை சாய்ஸ் மை ஃபியூச்சர் (MCMF) என்ற இலவச தொழில் வழிகாட்டுதல் மதிப்பீட்டைப் பெறுகின்றனர். எளிய தொழில் வழிகாட்டுதல் மதிப்பீட்டுக் கருவியான எம்சிஎம்எஃப், மாணவர்களுக்கு விரிவான நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஆன்லைன் மூலமாகப் பெறப்படும் இந்த தொழில் வழிகாட்டுதல் தீர்வு, பள்ளி மாணவர்கள் தங்கள் பலத்தின் அடிப்படையில் சரியான வாழ்க்கைப் பாதைகளை அடையாளம் காண உதவுகிறது.

இக்கருவி ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் தற்போது கிடைக்கிறது. மாணவர்கள் விரும்பும் துறைகளைப் பற்றியும், அதில் ஸ்டெம் துறைகளை குறிப்பாக வலியுறுத்தும் விதமாகவும் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படுகினறன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 10,931 மாணவர்களுக்கு இக்கல்வி நிறுவனம் வழிகாட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பள்ளிகள் வழங்கியுள்ள கருத்துகள்: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சித்தராமபுரம் கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே.சந்திரசேகர் கவுட் இந்த முன்முயற்சியின் கீழ் நடத்தப்படும் அமர்வுகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டபோது, “அறிவியல் திறமையின் மூலம் மாணவர்களை சிறந்த கற்றறிவாளர்களாக உருவாக்க இது மிகச் சிறந்த முயற்சியாகும்.

ஒவ்வொரு மாணவரிடத்திலும் பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனையையும் வளர்க்கும் வகையில் தங்களது சேவை அமைந்துள்ளது. அறிவியல் ரீதியான புனைக்கதைகளைப் படிக்கும்போது குழந்தைகளுக்கு சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் கிடைப்பதுடன், கற்பனைத் திறனையும், உயர்தர சிந்தனையையும் வளர்க்க உதவுகிறது” எனக் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின்படி பள்ளிகளுக்குச் செல்லும் நிபுணர் குழுவினர், கற்றலை எளிதாகவும், வேடிக்கையாகவும் மாற்றுவதுடன் அறிவியலை எவ்வாறு, ஏன் புரிந்து கொள்ள வேண்டும், அன்றாட வாழ்க்கையில் எப்படி அதனைப் பயன்படுத்தலாம் என மாணவர்களுக்குப் புரியவைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அமர்வுகளின் போது நடைபெறும் செயல்விளக்க பரிசோதனைகள் ஈர்க்கக் கூடியதாகவும், உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

ஸ்டெம் (STEM) துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் கலந்தாலோசனைகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நேரடி அனுபவங்கள், கலந்தாலோசனைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அறிவியல் கருத்துகளின் வெளியுலகப் பயன்பாடுகளை புரிய வைப்பதுடன், ஸ்டெம் துறைகளில் கணிசமான அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x