Published : 14 Mar 2024 04:19 PM
Last Updated : 14 Mar 2024 04:19 PM
இந்தியாவின் முதல் பெண் கணித மேதை என்றதும் ‘மனித கணினி’ சகுந்தலா தேவி என்று பலர் சொல்லக்கூடும். இதேபோன்று இந்தியா மேலும் பல பெண் கணித மேதைகளை கண்டிருக்கிறது. அப்படி அறியப்படாத ஒரு பெண் கணித மேதையான இராமன் பரிமளா பற்றி இந்த உலக கணித தினத்தில் தெரிந்து கொள்வோமா!
மயிலாடுதுறையில் 1948 நவம்பர் 21 அன்று பரிமளா பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலப் பேராசிரியர். பரிமளாவின் மனமோ கணிதத்தில் லயித்தது. இதனை அறிந்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்க அவரது தந்தை அனுமதித்தார்.
பின், சென்னை பல்கலைக்கழக கணிதத் துறையான இராமானுஜன் உயர்கல்வி நிலையத்தில் (RIASM) கணிதப் பாடத்தில் முதுகலை பெற்றார். மும்பையில் டாட்டா அடிப்படை ஆய்வு நிலையத்தில் பேராசிரியர் ஆர். தரனின் நெறியாளுகையின்கீழ் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்து 1976 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.
திருப்புமுனையான திருமணம்: இந்நேரத்தில் இராமன் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இவர், டான்சானியா நாட்டின் உள்துறை பரிவர்த்தனை குழுவில் தலைமை தணிக்கையாளராக பணிபுரிந்தார். தனது கணவர் முக்கிய பொறுப்பில் இருந்ததால் திருமணம் ஆன சில நாட்களில் டாட்டா ஆய்வு நிலையத்தில் ஓராண்டு விடுப்பு பெற்று கணவரின் ஊருக்கு சென்றார் பரிமளா.
அங்கு இன்பமான இல்வாழ்க்கை அமைந்தாலும், பரிமளாவின் ஆழ்மனது தான் மிகப் பெரிய கணித ஆய்வாளராக எதிர்காலத்தில் திகழ வேண்டுமென கூறிக்கொண்டே இருந்தது. இதை அறிந்த அவரது கணவர் இராமன் மனைவியின் கனவு நனவாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெருமை சேர்க்கும் மாணவச் செல்வங்கள்: இருவரும் சுவிஸ்சர்லாந்தின் ஜூரிச் நகரில் அமைந்த கல்வி நிலையத்திற்குச் சென்றனர். அங்கு, முனைவர் பட்டத்திற்குப் பிறகு நிகழ்த்தும் ஆய்வுகளில் பரிமளா முழு வீச்சில் இறங்கினார். பிற்காலத்தில் சுஜாதா இராமதுரை, சுரேஷ் வேனாபள்ளி ஆகிய இரு இந்தியர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக பரிமளா திகழ்ந்தார்.
இவ்விருவரில், சுஜாதா இராமதுரை இத்தாலி நாட்டின் ஐ.சி.டி.பி அளிக்கும் புகழ் பெற்ற இராமானுஜன் பரிசை 2006 ஆம் ஆண்டில் வென்று பரிமளாவிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.
சுரேஷ் அமெரிக்காவின் எமோரி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறார். தான் உயர்ந்தது மட்டுமல்லாது மற்றவர்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு உழைக்கும் தன்மை பரிமளாவின் மிகப் பெரிய பண்பாகும்.
பங்களிப்பும் கவுரவமும்: பரிமளாவின் பெரும்பாலான ஆய்வுகள் இயற்கணிதம், இயற்கணித வடிவியல், இருபடி உருவகங்கள், ஹெர்மீஷியன் உருவகங்கள், நேரிய இயற்கணித குலங்கள் மற்றும் கேல்வா துணை அமைப்பொற்றுமைகள் ஆகிய கணித உட்துறைகளை சார்ந்து அமைந்துள்ளன. இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய பரிமளா பல விருதுகளையும், சிறப்பு கவுரவங்களையும் பெற்றுள்ளார்.
அவற்றுள் சில, 1987-ல் மிகச் சிறந்த ஆய்வு புரிந்தமைக்கான பட்நாகர் பரிசு, 1992-ல் இந்தியாவில் இயங்கிவரும் மூன்று மதிப்புமிகு அறிவியல் கழகங்களான இந்திய தேசிய அறிவியல் கழகம் (INSA), இந்திய அறிவியல் கழகம் (IASc) மற்றும் தேசிய அறிவியல் கழகம் இந்தியா (NASI) ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினர் அந்தஸ்து (Fellow).
இவை தவிர அமெரிக்கா அட்லாண்டா நகரில் அமைந்த எமோரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கலைத் துறையில் மேன்மைமிக்க கணிதப் பேராசிரியராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இந்திய பெண்கள் அறிவியல் துறையில் உலகளவில் சாதிக்கலாம் என நிரூபித்து அனைத்து பெண்களுக்கும் சிறந்த அறிவியல் முன்னோடியாகத் திகழ்கிறார்.
- கட்டுரையாளர் : கணித ஆராய்ச்சியாளர், ’பெண் கணித மேதைகள்’ நூலாசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT