Published : 14 Mar 2024 03:58 PM
Last Updated : 14 Mar 2024 03:58 PM

எனது கணித வகுப்பு அனுபவங்கள் | உலக கணித தினம்

என்னுடைய வகுப்பில் மாணவர்கள் கணக்கில் சுணக்கம் காட்டும் பொழுது சில வழிமுறைகளைப் பின்பற்றுவதுண்டு. A வெட்டு B, A சேர்ப்பு B என்ற பகுதியை நடத்திக் கொண்டிருந்தேன். A வெட்டு B-க்கு A சேர்ப்பு B என்பதற்குரிய பதிலையே சில மாணவிகள் எழுதிக் கொண்டிருந்தனர். எத்தனை முறை கூறியும் மீண்டும் மீண்டும் அதே தவறையே செய்து கொண்டிருந்தனர்.

பிறகு மாணவிகளை மூன்று குழுக்களாகப் பிரித்தேன். தமிழ் நன்றாகப் படிப்பவர்கள், ஆங்கிலம் நன்றாகப் படிப்பவர்கள், இரண்டும் நன்றாகப் படிப்பவர்கள் என மூன்று குழுக்களாக நிற்க வைத்து, அதன்மூலம் இந்தக் கருத்தை புரிய வைத்த பொழுது தவறாகக் கணக்குகள் செய்த மாணவர்களும் சரியாகச் செய்ய ஆரம்பித்தனர். இதுபோன்ற குழுச் செயல்பாடுகள் என்னுடைய கணிதப் பாடத்தை எளிமையாக்கி மாணவர்களிடம் கணக்கு குறித்த ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது.

விளையாட்டு, பாராட்டு: அதேபோல பகடைக் கணக்குகள் நடத்தும் பொழுது இரண்டு பகடைகளை கொண்டு வந்து நேரில் காட்டி நடத்தினேன். மாணவிகள் மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டனர். ஒரு படம் நூறு வார்த்தைகளுக்குச் சமம்.

ஒரு பொருள் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பது போல மாதிரிகளையும், உண்மைப் பொருட்களையும் கொண்டு வந்து மாணவர்களுக்குக் காண்பித்து கணக்கைக் கற்பிக்கும் பொழுது அவர்கள் மிகவும் எளிதாகக் கணக்கை கற்றுக் கொள்கின்றனர்.

சில சமயங்களில் ஓரிரு புதிர்க் கணக்குகளைக் கொடுத்து எனது வகுப்பைத் தொடங்குவேன். அதற்கு மாணவர்கள் ஆர்வமாக விடைகளைக் காண முற்படுவர். விடைகளைக் கண்டுபிடித்து விட்டால் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

மேலும் சில புதிர்க் கணக்குகளை ஆர்வத்துடன் கேட்பர். சில சமயங்களில் பாரதியார் கவிதைகள், தாராபாரதி கவிதைகள் போன்றவற்றைப் பாடச் செய்து அவர்களை ஊக்குவித்து பிறகு வகுப்பைத் தொடங்குவேன். பாடல் பாடிய மகிழ்ச்சியோடு மாணவர்கள் கணக்குகளை கவனிக்கத் தொடங்குவர்.

இவ்வாறாக என்னுடைய கணித வகுப்பை உயிரோட்டமாக மாற்றிக் கொள்ள குழுச் செயல்பாடுகள், கற்றல்- கற்பித்தல் துணை கருவிகள், சிறு சிறு பாராட்டுக்கள், புதிர்க் கணக்குகள், பாடல்கள் எனக்குக் கை கொடுத்து உதவுகின்றன. மாணவர்களும் கணிதப் பாடத்தை மிகவும் விரும்பி கற்க ஆரம்பிக்கின்றனர்.

- கட்டுரையாளர்: கணித ஆசிரியை, காஞ்சிபுரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x