Published : 09 Mar 2024 06:19 AM
Last Updated : 09 Mar 2024 06:19 AM
சென்னை: 6ஜி தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சிகளை துரித்தப்படுத்த, திட்ட அறிக்கைகளை தயார் செய்துமுன்மொழியுமாறு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்ளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்தின் வடிவமைப்பை மேம்படுத்துவதிலும், அதன் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கும் நோக்கிலும் கடந்த ஆண்டு ‘பாரத் 6ஜி’ என்ற திட்டத்தைபிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அந்த வகையில், 6ஜி தொழில்நுட்பத்தை 2 கட்டங்களாக இந்தியாவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 2023 முதல் 2025 வரைமுதல்கட்டத்தில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டுகளிலும், 2-ம் கட்டத்தில் வணிகமயமாக்கலிலும் கவனம் செலுத்தப்படும். இதையொட்டி, இந்தியாவில் 6ஜி தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
பாரத் 6ஜி திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 6ஜிதொடர்பான ஆராய்சிகளை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்டப் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து 6ஜி தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சிகளை தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகளை தயார்செய்து முன்மொழிய கோரியுள்ளது.
இந்நிறுவனங்கள் முன்மொழிவுகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.bharat5glabs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் இந்த தகவல்களை தங்களது கல்வி நிறுவனத்தின் இணையதளங்களில் இடம்பெறச்செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT