Published : 07 Mar 2024 06:30 AM
Last Updated : 07 Mar 2024 06:30 AM
ஓசூர்: ஓசூர் அருகே மத்திகிரி அரசுப் பள்ளி் வகுப்பறையில் மாணவர்களை மதிய உணவு சாப்பிட அனுமதி மறுக்கப்படுவதால், மைதானத்தில் உச்சி வெயிலில் மண் தரையில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் அவலம் இருந்து வருகிறது.
ஓசூர் அருகே மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை மேலும், பாதுகாப்பான குடிநீர் வசதியும் இல்லை.
தூசி பறக்கும் நிலை: மதிய இடைவேளை நேரத்தில் மாணவர்களை வகுப்பறை மற்றும் வகுப்பறை வரண்டாவில் உட்கார்ந்து சாப்பிட ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை. இதனால், பள்ளி மைதானத்தில் மதிய நேரத்தில் உச்சிவெயிலில் மண் தரையில் அமர்ந்து மாணவர்கள் தினசரி மதிய உணவை சாப்பிடும் அவலம் இருந்து வருகிறது. திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிடுவதால், தூசிகள் பறந்து உணவில் விழும் நிலையும் உள்ளது.
இதுதொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: எங்கள் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லை. பள்ளியின் சுற்றுச் சுவரையொட்டி, கழிவு நீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், பள்ளி வளாகத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனிடையே மதிய உணவை மைதானத்தில் அமர்ந்து சாப்பிடுவதால், பலருக்கும் வெயில் காரணமாக மயக்கம் ஏற்பட்டு வருகிறது.
பாதுகாப்பற்ற குடிநீர்: மைதானத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட போதிய இடமில்லாததால், வெயில் காரணமாகச் சுடும் மண் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலையுள்ளது. குடிநீர் வசதியில்லாததால், பாதுகாப்பற்ற குடிநீரைப் பருகும் நிலையுள்ளது. இது தினசரி எங்களுக்குத் தண்டனை வழங்குவது போல் உள்ளது.
மதிய உணவு சாப்பிட்ட பின்னர் தான வகுப்பறைகள் திறக்கப்படுகிறது. எங்களின் துயரத்தைப் போக்க மதிய உணவு சாப்பிட தனி அறை கட்டிக் கொடுக்க வேண்டும் அல்லது வகுப்பறை வரண்டாவில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும். கூடுதல் வகுப்பறை மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அசுத்தமாகி விடும்: இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் உக்கிரம் உள்ளது. இந்நிலையில், மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட மைதானத்தில் உட்கார வைப்பது வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் கேட்டால், வகுப்பறையில் சாப்பிட அனுமதித்தால், அசுத்தமாகிவிடுவதாகக் கூறுகின்றனர். இதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரிய வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறும்போது, “மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளி 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 15 வகுப்பறைகள் தான் உள்ளன. கூடுதலாக 10 வகுப்பறைகள் தேவை. மாணவர்கள் வகுப்பறை வரண்டாவில் அமர்ந்து சாப்பிட இடம் வசதி இல்லை. மைதானத்தில் உட்கார வேண்டாம் எனக் கூறினாலும், மாணவர்கள் கேட்பதில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT