Last Updated : 06 Mar, 2024 06:29 PM

 

Published : 06 Mar 2024 06:29 PM
Last Updated : 06 Mar 2024 06:29 PM

தமிழகத்தில் ‘ஓபன் புக்’ தேர்வு முறை செயல்படுத்தப்படாது: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சியில் நடந்த விழாவில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் விருதுகளை வழங்கினார்

திருச்சி: "பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து தேர்வை எழுதும் நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது" என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா திருச்சியயில் இன்று நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

விருதுகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது: "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வி துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பெற்றுப்பேற்று முதல் இன்று வரை 3521 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும். விருது வழங்குவது பெயருக்காக அல்ல. அடுத்தடுத்து மற்ற தலைமை ஆசிரியர் விருது பெற ஊக்குவிக்கும் விதமாக தான் விருது வழங்கப்படுகிறது. பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் 136 தொகுதிகளுக்கு ஆய்வு செய்துள்ளேன்.

தலைமை ஆசிரியர்கள் உங்கள் பள்ளிக்கு என்ன தேவையோ அதனை கேட்டு பெறுங்கள். ஏற்கெனவே தெரிவித்து இருந்தாலும் இன்னும் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து கேளுங்கள். தேவையானதை பெற்று கொண்டு நல்லதொரு தேர்வு முடிவுகளை கொடுக்க வேண்டும். புதுமை பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் சதவீதம் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் எங்களின் கரத்தை வலுப்படுத்துங்கள் அனைவரும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவோம்" என்றார்.

இந்த விழாவில், கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு, இல்லம் தேடி கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்திய நூறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது. சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதேபோல கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்திய 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.

விழாவுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து தேர்வை எழுதும் (ஓபன் புக்) நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது" என்று கூறினார்.

இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x