Published : 29 Feb 2024 05:28 AM
Last Updated : 29 Feb 2024 05:28 AM

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்

கோப்புப்படம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வுகள் முறையாக நடைபெற ஏதுவாக, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

வழக்கமாக, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தனித் தேர்வர்களின் புள்ளி விவரங்கள், தேர்வுக்கான உதவி மைய எண்கள் போன்ற தகவல்களை ஒரு வாரத்துக்கு முன்பாகவே தேர்வுத் துறை வெளியிடும். ஆனால், இம்முறை,இந்த விவரங்களை தேர்வுக்கு முந்தைய நாளான இன்று (பிப்.29) பள்ளிக்கல்வி அமைச்சர் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x