Published : 29 Feb 2024 04:00 AM
Last Updated : 29 Feb 2024 04:00 AM
ஓசூர்: பள்ளிக் கல்வித்துறை மூலம் நகரப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட மாணவர்கள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தைக் கிராமப் பகுதி பள்ளிகளில் தொடங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நகரப் பள்ளிகளில் வசதி: இந்நிலையில், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், பதிவைப் புதுப்பிக்கவும் பள்ளிக் கல்வித்துறை மூலம் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் சேவை கடந்த 23-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கல்வி உதவித் தொகை பெறும் திட்டத்தில் மாணவர்கள் உதவிகள் பெற புதிய ஆதார் அட்டை பெறவும், திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தல் பணிக்குக் கிராம பகுதி மாணவர்கள் அரசின் ஆதார் சேவை மையங்களை நாடும் நிலையுள்ளது.
சிரமத்தைச் சந்திக்கும் நிலை: குறிப்பாக, ஓசூர் பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராம மற்றும் கிராமப் பகுதி மாணவர்கள் ஆதார் சேவையை பெருவதில் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கும் நிலையுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கிராம பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் சேவையை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.முதுகானப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ்ரெட்டி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு உதவித் தொகை பெற ஆதார் அட்டையைப் புதுப்பிக்கவும், செல்போன் எண் மற்றும் முகவரி, பெயர் திருத்தம் மேற்கொள்ளவும் ஓசூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு வரும் நிலையுள்ளது. ஆனால், இங்கு கூட்டம் அதிகம் இருப்பதால், உடனடியாக பதிவு செய்ய முடியவில்லை.
மேலும், திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.200 கட்டணமாக வசூலிக்கின்றனர். எனவே, கிராமப் பள்ளிகளில் ஆதார் புத்துப்பித்தல் சேவையைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாகக் கிராம பகுதியில் ஆதார் சேவைக்குச் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்: இது தொடர்பாக ஆதார் சேவையை வழங்கி வரும் ‘எல்காட்’ நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் 13 ஆயிரம் பேர் ஆதாரைப் புதுப்பிக்காமலும், ஆதார் பதிவு செய்யாமலும் உள்ளனர். அனைவருக்கும் ஆதார் கட்டாயம் என அறிவுறுத்தலின் பேரில், தற்போது, ஆதார் சேவை மையங்களுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பேர் வருகின்றனர். ஆதார் எண் புதுப்பிக்கவும், புதிய பதிவுக்கும் அதிகபட்சாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதற்கான ரசீதும் வழங்கப் படுகிறது. ரசீது இல்லாமல் மக்களை ஏமாற்றிக் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம பகுதி மாணவர்களுக்கும் இலவசம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் நகரப் பகுதி பள்ளிகளில் ஆதார் சேவை வட்டாரத்துக்கு ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. இச்சேவையை ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள உருது பள்ளியில் பெற முடியும். கிராமப் பகுதி மாணவர்கள் அங்கு இலவசமாக இச்சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம். இச்சேவை கிராம பள்ளிகளுக்கு படிப்படியாகத் தான் வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT