Published : 14 Feb 2024 04:02 AM
Last Updated : 14 Feb 2024 04:02 AM

சேலத்தில் நாளை கல்விக் கடன் மேளா: மாணவர்கள் பயனடைய அழைப்பு

பிரதிநிதித்துவப் படம்

சேலம் / ஈரோடு: சேலத்தில் நாளை ( 15-ம் தேதி ) நடைபெறும் கல்விக் கடன் மேளாவில், கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் பங்கேற்கலாம், என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்விக்கடன் மேளா நாளை ( 15-ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடத்தப் படவுள்ளது. இந்த முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து, சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் புதியதாக கல்விக் கடன் தேவைப்படுபவர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும், பிளஸ் 2 படித்தவர்களுக்கு பட்டப் படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முது நிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல் மற்றும் வருமான சான்று நகல் ஆகிய ஆவணங்களை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வர வேண்டும். கல்விக் கடன் மேளாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் வழங்கும் கல்விக் கடன் விண்ணப் பத்தினை உடனடியாக பரிசீலித்து, கடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

ஈரோட்டிலும் நாளை சிறப்பு முகாம்: கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம், ஈரோட்டில் நாளை (15-ம் தேதி) நடக்கிறது. திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லூரி நிறுவன வளாகத்தில் நாளை காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முகாமைத் தொடங்கி வைக்கிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாளர்கள் மற்றும் தனியார் வங்கியாளர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்று தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவுள்ளனர்.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in அல்லது www.jansamarth.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை, தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தின் நகலுடனும் கல்வி, ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடனும் முகாமில் பங்கேற்கலாம். கல்விக் கடனுக்காக புதியதாக விண்ணப்பிப்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும், கலந்தாய்வு மூலமாக பெறப் பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை மாணவர்கள் கொண்டு வர வேண்டும், என ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x