Published : 11 Feb 2024 01:29 PM
Last Updated : 11 Feb 2024 01:29 PM

அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு 100% குடிநீர் இணைப்பு: தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

சென்னை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக மத்திய அரசு குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரதம் திட்டம் ( கிராமப் புறம் ) ஆகியவற்றின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், வரும் ஆண்டில் இத்திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் ஆகியோர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் குறித்தும், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், நடைபெற்று வரும் 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப் படும் 56 திட்டங்கள் குறித்தும் விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கிய பிறகு கிராம சபைகளில் வைத்து உறுதி செய்வது குறித்தும், ஆலோசிக்கப் பட்டது.

ஊரகப் பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் செயல்பாடுகள், திடக் கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்தும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் தனி நபர் வீடுகளில் 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டுவது மற்றும் பயன்படுத்துவதற்கு மாநில அரசால் மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் தேசியஅளவில் 73.98 சதவீத வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 1 கோடிக்கு மேல் அதாவது 80.43 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி தேசியஅளவில் மாநிலத்தின் சிறப்பான செயல்பாடு பாராட்டப்பட்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன் வாடிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டுள்ள சிறப்பான நடவடிக்கைகள் இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது எனவும் பாராட்டப்பட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x