Published : 03 Feb 2024 09:34 PM
Last Updated : 03 Feb 2024 09:34 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் 459 மாணவ, மாணவியருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்த வந்த தமிழக ஆளுநர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பட்டமளிப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 351 பேருக்கு முனைவர் பட்டம், 44 பேருக்கு இளங்கலை பட்டம், 64 பேருக்கு முதுகலைப் பட்டம் என மொத்தம் 459 பேருக்கு தமிழக ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். இளங்கலை, முதுகலைப் பாடப்பிரிவில் 108 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
இதில் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி ஒருங்கிணைந்த வேதியியல் பாடப்பிரிவைச் சேர்ந்த அனு பேபி, எம்எஸ்சி ஒருங்கிணைந்த கடல்சார் அறிவியல் பாடப்பிரிவை சேர்ந்த ஏஞ்சலின் ஜாய்ஸ் ஆகியோர் இரு தங்கப் பதக்கங்களை பெற்றனர். இந்த பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவுபெற்றுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளை சேர்ந்த மொத்தம் 40622 பேர் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பட்டம் பெற்றுள்ளனர்.
கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழக இயந்திர பொறியியல்துறை பேராசிரியர் நளினாக்ஷ் எஸ்.வியாஸ் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் பேசியதாவது: “இந்த உலகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பட்டம் பெற்ற நீங்கள் முக்கிய பங்கு வகிப்பீர்கள். சவால்கள் அதிகமாக உள்ள நிலையில், நீங்கள் தேர்வு செய்துள்ள துறையில் திறன் மிக்கவர்களாக வரவேண்டும். நீங்கள் மாற்றத்தின் முகவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். திருநெல்வேலியிலேயே விவசாயம், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டிற்கான சாத்திய கூறுகளையும் உருவாக்க வேண்டும். புதிய யோசனைகளை முயற்சிகளாக்கி முற்போக்கு சிந்தனையோடு வெற்றி பெற வேண்டும்.
உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் உள்ளதால் தன்னம்பிக்கையோடு பிற்போக்கு சிந்தனை இல்லாமல் செயல்பட வேண்டும். தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இரும்பு, எஃகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள இது உதவும். இந்தியா இன்று எல்லை தாண்டிய வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியில் பட்டம் பெற்ற மாணவர்களாகிய உங்களின் பங்கும் இருக்கவேண்டும். கலாச்சார, பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதில் உதவக்கூடிய நவீன நாவல் தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ந.சந்திரேசகர் அனைவரையும் வரவேற்றதோடு, பல்கலைக்கழகம் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வாசித்தார். பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர் கல்விதுறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அழக்கப்பா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இதுபோல் திமுகவினரும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவுக்குப்பின் பல்கலைக்கழக செனட் கூட்ட அரங்கில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியருடன் ஆளுநர் தனியாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT