Published : 02 Feb 2024 07:00 AM
Last Updated : 02 Feb 2024 07:00 AM
புதுடெல்லி: யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத்தாள்களை கசியவிடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேரஉதவும் நீட், உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ, சியுஇடி, அரசுப் பணிகளில் ஆட்களைத் தேர்வு செய்ய உதவும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலையில் சேர உதவும் தேர்வுகள், படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
இதைத் தடுக்கும் நோக்கில் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. இந்த மசோதாவானது நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேர்வு வினாத்தாள்களை கசிய விடும் நபருக்கு 10 ஆண்டு வரை சிறை, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள், நீட், ஜேஇஇ, சியுஇடி தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளுக்கும் இது பொருந்தும்.
இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. வரும் திங்கள்கிழமை இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல்10 ஆண்டு வரையும், ரூ.1 கோடிவரை அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வுகளில் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தேர்வுக்கான விகிதாச்சார செலவை வசூலிப்பது தண்டனையாக வழங்கப்படும் என மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதுதவிர, நான்கு ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கும் அந்த தேர்வு வழங்கும் சேவை நிறுவனத்துக்கு தடைவிதிக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த மசோதாவானது பொதுத் தேர்வுகளுக்காக உயர்மட்ட அளவிலான தேசிய தொழில்நுட்பக் குழுவை அமைக்கவும் வகை செய்கிறது. இந்தக் குழுவானது, தவறு இல்லாமல் தேர்வுகளை நடத்துவதற்கான வழிவகைகளை கண்டறியும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT