Last Updated : 01 Feb, 2024 04:24 AM

 

Published : 01 Feb 2024 04:24 AM
Last Updated : 01 Feb 2024 04:24 AM

புதுச்சேரியில் புத்தகப் பையில்லா தினம் - இந்த நன்முயற்சி அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் தானா?

அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் கோலங்கள் வரைதல், வான்நோக்கியைப் பயன்படுத்துதல், இசைக் கருவிகள் இசைத்தல் என பல்வகை செயல்திறன் பயிற்சிகளில் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் கடந்த 2020-ம்ஆண்டு வெளியிடப்பட்ட ‘பள்ளி புத்தகப் பை’ கொள்கையின் அடிப்படையில், புதுச்சேரியில் ‘பையில்லா தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான உத்தரவை கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் கடந்தாண்டு ஜூலை அனுப்பியது. காரைக்கால் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி மாதத்தில் கடைசி வேலை நாளில் ‘பையில்லா தினம்’ (NO BAG DAY) கடைபிடிக்க வேண்டும். அந்த நாளில் மாணவர்களுக்கு கை வேலை, விநாடி - வினா, விளையாட்டு மற்றும் கலைசார் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் 10 பையில்லா தினங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை, மாதத்தின் கடைசி வேலைநாள் விடுமுறையில் வந்தால் முந்தைய வேலைநாள் பையில்லா தினமாக பின்பற்றப்பட வேண்டும்.

இதுதவிர மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, குழந்தைகளுக்கு விளையாட்டு நிகழ்வுகள், அறிவியல் கிளப், கணிதம் கிளப், மொழி கிளப் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக விநாடி - வினா, கட்டுரை, விவாத நிகழ்வு, கலைநிகழ்வு, சமூகத்துக்கு பயனுள்ளதாக பணியாற்றும் பணியை செய்தலை ஊக்குவித்தல் ஆகியவற்றையும் செய்து, இந்த பையில்லா தினத்தில் இதன் செயல்வழித்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன.

இந்த நடைமுறையை அரசுப் பள்ளிகள் முறையாக கடைபிடிப்பதும், தனியார் பள்ளிகள் துளியும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று (ஜன.31) மாதத்தின் கடைசி நாள். இதையொட்டி புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புத்தகப் பைகளை எடுத்து வரவில்லை. வழக்கமான வகுப்புகள் நடைபெறாமல், கல்வித்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்ட செயல்திறன் பயிற்சிகள் பல அளிக்கப்பட்டன.

முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள்
பாதுகாப்பாக சிறிய அளவிலான மின்னலை உருவாக்கி, பாராடே கூண்டினைக்
கொண்டு காய்கறி விற்கும் ஒரு பெண்மணி (பொம்மை ) எவ்வாறு மின்னலின் தாக்குதலுக்கு
ஆளாகிறார் என்பதையும், அப்பெண்மணி மின்காப்பு கவசத்தால் எவ்வாறு மின்னல்
தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறார் என்பதையும் செயல்
விளக்கத்துடன் விளக்குகின்றனர்.

குறிப்பாக முத்தரையர்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘மின்னலினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது எப்படி?’ என்பதை ஒரு மாதிரி வடிவ செயல்விளக்கத்துடன் மாணவர்கள் செய்து காட்டினர்.

இப்பள்ளியின் துணை முதல்வர் கோகிலாம்பாள் ஆலோசனையின் பேரில் இயற்பியல் ஆசிரியர்கள் ஞானம், ராம், ஆங்கில ஆசிரியை சொர்ணாம்பிகை, நுண்கலை ஆசிரியர் இளமுருகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதை வடிவமைத்திருந்தனர்.

“நம் நாட்டில் ஆண்டுதோறும் 1,700 பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கிறார்கள் என்று அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் சில எளிய நடைமுறைகளை இந்த செயல்விளக்கம் மூலம் முயற்சித்திருக்கிறோம்” என்று இதில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இடி மின்னல் விழிப்புணர்வு குறித்த விநாடி - வினாவும் நடத்தப்பட, மாணவர்கள் ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.

இதேபோல் முத்தரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில் கோலப்போட்டி, ஓவியம் வரைதல், யோகா, இசை கருவிகள் இசைத்தல், வான்நோக்கியைப் பயன்படுத்துதல் என செயல்முறை சார்ந்த நிகழ்வுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஓவியம் வரைந்து மகிழும் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்.

பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கர ராசு மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இதுபோன்ற பல்வேறு அரசுப் பள்ளிகளில் பையில்லா தினம் நேற்று இனிதே கழிந்தது. மாணவர்கள் இதனை ஆர்வத்துடன் அணுகுவதை காண முடிந்தது.

அதே நேரத்தில், புதுச்சேரியில் உள்ள பல தனியார் பள்ளிகள் இந்த பையில்லா தினத்தை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கம்போல் பள்ளிகளுக்கு புத்தகப் பையுடன் மாணவர்கள் வந்திருந்தனர். காலை தொடங்கி மாலை வரையில் எந்த மாற்றமும் இல்லாமல் வகுப்புகள் நடைபெற்றன.

“அரசு உத்தரவு என்பது அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தானா..? தனியார் பள்ளிகளில் பயிலும் எங்கள் குழந்தைகளையும் இதுபோல் ஈடுபடுத்தலாமே..! உத்தரவை பிறப்பித்து, அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கல்வித்துறை கண்காணிக்காதா..? ” என்று தனியார் பள்ளிகளின் பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர். இதே கேள்வி நமக்குள்ளும் எழுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x