Published : 28 Jan 2024 05:42 AM
Last Updated : 28 Jan 2024 05:42 AM
சென்னை: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அரசின் சிறப்பு சலுகைகள் கிடைப்பதற்கான 12பி அங்கீகாரம் பெறுவதற்குரிய விதிமுறைகளில் யுஜிசி திருத்தம் செய்துள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி, 12பிஅங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி மற்றும் புதிய கல்வி சார் திட்டங்களை அமல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு 12பி அங்கீகாரத்தை யுஜிசி வழங்கி வருகிறது. அவ்வாறு 12பி அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் யுஜிசி வழிகாட்டுதல் அடிப்படையில் முறையான கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.
இந்நிலையில், 12பி அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளில் யுஜிசி தற்போது மாற்றம் செய்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய கல்விக் கொள்கை- 2020 அமலானது முதல் உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தியபடி யுஜிசியின் 12பி அங்கீகார அனுமதிக்கான விதிகள் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கை யுஜிசி வலைதளத்தில் (/www.ugc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதுதொடர்பான கருத்துகளை suggestions.collegesregulation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT