Published : 28 Jan 2024 06:24 AM
Last Updated : 28 Jan 2024 06:24 AM
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 29,685 மாணவர்கள் பட்டம் பெற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை தாங்கியஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 134 மாணவர்களுக்கு பட்டங்களை நேரடியாக வழங்கி கவுர வித்தார்.
134 பேருக்கு நேரடி பட்டம்: சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந் தருமான மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, பதிவாளர் அஸ்வந்த் நாராயணன், சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
நடப்பாண்டில் மருத்துவம் - 6,753, பல் மருத்துவம் - 1,944, இந்தியமருத்துவம் - 2,002, செவிலியர், மருந்தியியல், இயன்முறை மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள் - 18,986 என மொத்தம் 29,685 பேர் பட்டங்களை பெற்றனர். இதில் 20,177 மாணவிகள், 9,508 மாணவர்கள் ஆவர். நேரடியாக 134 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 29,551 பேர் கல்லூரிகள் மூலம் பட்டங்களை பெற்றனர்.
10 பதக்கங்கள் பெற்ற சிந்து: மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சிறந்து விளங்கிய 119 மாணவர்களுக்கு 73 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள், 37 அறக்கட்டளை சான்றிதழ்கள், பல்கலைக்கழகத்தின் சார்பில் 48 பதக்கங்கள் என மொத்தம் 179 பதக்கங்கள் வழங்கப்பட்டன. சென்னை இஎஸ்ஐமருத்துவக் கல்லூரி மாணவி சிந்து அதிகபட்சமாக 10 பதக்கங்களையும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை சேர்ந்த முகமதி யாசின் 9 பதக்கங்களையும் பெற்றனர்.
திறன்களை வளர்க்க வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி ஜிம்பர் பல்கலைக்கழக இயக்குநர் ராகேஷ் அகர்வால் பேசியதாவது:
வளர்ந்து வரும் காலத்துக்கு ஏற்ப நாம் நம் திறன்களை வளர்த்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப வாய்ப்புகளை பெருக்கி கொள்ளலாம். மருத்துவம் என்பது தொழில் அல்ல. மருத்துவர்களுக்கு வாழ்க்கையில் உயர்ந்த நோக்கங்கள் உள்ளன. மாபெரும் தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா தெரிவித்ததுபோல, கல்வி மிகப்பெரிய ஆயுதம். அதை வைத்து உலகத்தை நாம் மாற்றியமைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT