Published : 28 Jan 2024 05:57 AM
Last Updated : 28 Jan 2024 05:57 AM
விழுப்புரம்: கரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது.
இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதால், அவர்களை சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான புகார்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகம், அனைத்து அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில், “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையில் பாடங்களை நடத்தச் சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச் சொல்வதோ கூடாது. பள்ளியில் நாங்கள் ஆய்வு செய்ய வரும்போது, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர் வகுப்பறையில் இருந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்காலிக ஆசிரியர்கள்: இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் மட்டும்தான், வகுப்பறையில் இருக்க வேண்டும். இவர்களைத் தவிர வேறு யாரையும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம்?: தன்னார்வலர்கள் பள்ளிப் பணிக்குச் செல்வதன் மூலம், எதிர்காலத்தில் ஆசிரியர் பணியை நிரந்தரமாக பெற வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி பணிக்குச் செல்கின்றனர். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் பணியாற்றும் நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.1,000 மட்டும ஊக்கத்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT