Last Updated : 23 Jan, 2024 09:02 AM

 

Published : 23 Jan 2024 09:02 AM
Last Updated : 23 Jan 2024 09:02 AM

மாணவர்களை ஆச்சரியப்படுத்திய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

விருதுநகர்: சந்திரயான்-3 திட்டத்தின் சாதனைகள் மற்றும் அவை கடந்து வந்த பாதை குறித்து, அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் அளித்த விளக்கத்தால் ஆயிரம் மாணவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

விருதுநகரில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி ஊக்கப்படுத்தும் காபி-வித் கலெக்டர் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற 60-வது நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்து பேசுகையில், பள்ளிப் பருவத்தில் கிடைக்கக் கூடிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு மிக முக்கியம். பள்ளி, கல்லூரி களில் நிறைய தேடுதல்களால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோர், வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைகிறார்கள். சாதாரண பின்புலத்திலிருந்து நிலவைத் தொட்டவர் இவர். உயர்ந்த எல்லையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பங்கேற்று சந்திராயன் திட்ட செயல்பாடுகள், கடந்து வந்த பாதைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரம் மாணவ, மாணவிகளையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் பேசியதாவது: விண்வெளிப் பயணம் மிகவும் சவாலானது. நாம் அனுப்பிய விண்கலம் நிலவில் வெற்றிகரமாக கால்பதித்து சாதனை படைத்துள்ளது.

நிலவுக்கு விண்கலங்களை அனுப்புவதில் அமெரிக்கா 3 முறையும், ரஷ்யா 11 முறையும், சீனா ஒரு முறையும் தோல்வி அடைந் தன. நாமும் இதற்கு முன்பு செலுத்திய விண்கலம் தோல்வி அடைந்தது. அதிலிருந்து கற்றுக் கொண்டது ஏராளம். அதனால் சந்திராயன்-3 மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தது. நிலவும், பூமியும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் வேகத்தை மிகத்துல்லியமாக மைக்ரோ விநாடி அளவில் கணித்து ராக்கெட் செலுத்தப்பட்டது.

நிலவில் 150 டிகிரி வெப்பமும், சூரியன் மறையும் போது மைனஸ் 150 டிகிரி குளிரும் இருக்கும். இதற்கு ஏற்றாற்போல் நமது விண்கலத்தை திட்டமிட்டு வடி வமைத்துள்ளோம். இதில் இயற் பியலும், கணிதமும் முக்கிய பங்கு வகித்தது. சந்திரயான்-3 விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல நூறு முறை ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டம் என்று எதுவும் இல்லை. அனுபவமும், செயல்திறனும் காரணம். அதன் மூலமாகவே நிலவில் 16 கிலோ எடையுள்ள லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. 14 நாட்களில் 100 மீட்டர் தூரம் ரோவர் நகர்ந்து சென்றுள்ளது.

அதன் மூலம் நிலவில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பல்வேறு தனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், 100 மீட்டர் ஆய்வில் தண்ணீர் இருப்பது கண்டறியப்படவில்லை. இதனால், நிலவில் தண்ணீர் இல்லை என்று கூறிவிட முடியாது. முயற்சி என்பது மிக முக்கியமானது. அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் நிலவிலிருந்தும் நாம் வேறு கோள்களுக்கு விண்கலங்களை அனுப்ப முடியும். திட்டமிட்ட நேரத்தில், திட்டமிட்ட இடத்தில் சந்திரயான் -3 நிலவில் வெற்றி கரமாக தரையிறங்கியது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், மாணவ, மாணவி களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையில், விண்வெளியில் செயல்படாமல் உள்ள செயற்கைக் கோள்களை பூமிக்கு ஈர்த்து, அதை வழியிலேயே எரித்து அகற்றும் திட்டமும் உள்ளது. மொழியும், நாம் படிக்கும் பள்ளி யும் சாதனைக்கு என்றுமே தடையாக இருப்பதில்லை, இருந்ததும் இல்லை. முயற்சியும், தொடர் பயிற்சியுமே முக்கியம். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கினாரா என்ற சந்தேகம் இப்போதும் பலருக்கும் உள்ளது. அவர் நில வுக்குச் சென்றதற்கான அறிவியல் சான்றுகளும், ஆதாரங்களும் உள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x