Published : 21 Jan 2024 05:02 AM
Last Updated : 21 Jan 2024 05:02 AM
சென்னை: பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டுதலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சகத்தின் துணை செயலர் தேவேந்திர குமார் சர்மா, அனைத்து உயர்கல்வித் துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பல்வேறு இடங்களில் எந்தவொரு கொள்கையும், ஒழுங்குமுறையுமின்றி கட்டுப்பாடற்ற வகையில் தனியார் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சலை உருவாக்குவது, தற்கொலைக்கு தூண்டுதல் என பல முறைகேடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனவே, நாட்டில் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு: பயிற்சி மையத்தின் இடவசதிஉள்ளிட்ட முழு விவரங்களுடன் பதிவு செய்தல், வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான சரியான வழிகாட்டுதல்களை வழங்குதல், தகுதியுள்ள பயிற்சியாளர்களை நியமித்தல், நியாயமான கட்டணத்தை வசூலித்தல், கட்டணங்களுக்கு உரிய ரசீதுவழங்குதல், உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், வருகை பதிவேடுகள், கணக்குகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் முறைகேடாக செயல்படும் பயிற்சி மையங்களுக்கு முதல்கட்டமாக ரூ.25 ஆயிரமும், அடுத்தகட்டமாக ரூ.1 லட்சமும் அபாரதம் விதிக்கப்படும். 3-வது முறையாக விதிமுறைகளை மீறும் பட்சத்தில் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT