Published : 15 Jan 2024 05:46 AM
Last Updated : 15 Jan 2024 05:46 AM
சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கான ‘ஸ்லெட்' தகுதித் தேர்வை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தேர்வு முதல்முறையாக கணினிவழி தேர்வாக நடத்தப்படுகிறது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "ஸ்லெட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரியராகலாம். ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும்.
அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம். ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வை நடத்தியது.
கணினிவழியில் தேர்வு: இந்நிலையில், 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
தொடர்ந்து, ஸ்லெட் தேர்வு நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. யுஜிசி நெட் தேர்வைப் போன்று ஸ்லெட் தேர்வையும் கணினிவழியில் நடத்த முடிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது.
ஸ்லெட் தேர்வை ஆன்லைனில் நடத்தும் நிறுவனத்தை தேர்வுசெய்யும் பணி பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவடையும் என்று தெரிகிறது. தொடர்ந்து, பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 2 முறை தேவை: தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்" தேர்வுக்கான அதே கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி, வயது வரம்பு விதிமுறைகள் ஸ்லெட் தேர்விலும் பின்பற்றப்படும். எப்படி "நெட்" தேர்வு ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறதோ, அதேபோல, ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்று முதுகலைப் பட்டதாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT