Published : 13 Jan 2024 06:26 AM
Last Updated : 13 Jan 2024 06:26 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை செயலி வழியே பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த கல்விப் பொறியாளர்களால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இடிக்கும் பணிகள்: அதனடிப்படையில், பள்ளிகளில் பழுதான, இடிக்க வேண்டியவகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் இதர கட்டிடங்களின் விவரங்கள் பள்ளிக்கல்வி செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவையற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையை, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அளித்து, அதற்குரிய புகைப் படங்களையும் பதிவேற்ற வேண்டும். கூடுதலாக ஏதேனும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் எனில், அதுகுறித்த விவரங்களையும் தெரிவிக்கலாம்.
அதேபோல, மாவட்ட அளவிலான கல்வித் துறை அலுவலர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் இடிக்க வேண்டிய கட்டிடங்களின் நிலையை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை அகற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT