Published : 11 Jan 2024 06:20 AM
Last Updated : 11 Jan 2024 06:20 AM
சென்னை: சென்னை ஐஐடியில் வரும் கல்வியாண்டு முதல் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்தார். சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் ‘சாரங்’ என்ற கலைத் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ‘சாரங்-2024’ திருவிழா சென்னை கிண்டியில் உள்ளஐஐடி வளாகத்தில் நேற்று (ஜன.10)தொடங்கியது. இவ்விழா வரும் 14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் நடனம், ஓவியம், இசை உட்பட பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி வயலின் வாசித்து, விழாவைத் தொடங்கி வைத்தார். இதில்நாடு முழுவதும் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
தொடர்ந்து இயக்குநர் காமகோடி நிருபர்களிடம் பேசும்போது, ``சென்னை ஐஐடியின் சாரங்கலாச்சார நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மனச்சோர்வு நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும். மேலும், மாணவர்களின் திறமைகளும் அங்கீகரிக்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டு தமிழகத்தின் பாரம்பரிய இசை, நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடியில் வரும் கல்வியாண்டிலிருந்து விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதேபோல், 2 ஆண்டுகளில் கலைப் பிரிவுக்கும் தனி இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT