Published : 10 Jan 2024 04:03 PM
Last Updated : 10 Jan 2024 04:03 PM
சென்னை : சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) மாணவ - மாணவிகள் இக்கல்வி நிறுவனத்தின் 50-வது ஆண்டு வருடாந்திர கலாச்சார விழாவை இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை கொண்டாடுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "சென்னை ஐஐடியில் வருடாந்திர கலாச்சார விழா கடந்த 1974ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது மார்டி கிராஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டது. தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இத்திருவிழா, இந்திய வேர்களை மதிக்கும் விதமாகவும், இக்கல்வி நிறுவன வளாகம் எங்கும் காணப்படும் மான்களைக் கொண்டாடும் விதமாகவும் கடந்த 1996 முதல் 'சாரங்' என மறுபெயரிடப்பட்டது. கலாச்சாரத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக, இன்று மாலை (10 ஜனவரி 2024) ஓபன் ஏர் தியேட்டரில் நடைபெறும் ‘கலாச்சார இரவு’ நிகழ்ச்சியை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி வயலின் இசைத்து தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை https://saarang.org/Schedule என்ற இணைப்பில் காணலாம். இத்திருவிழாவிற்கு 80,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோவொரு கல்லூரி விழாவைப் போலன்றி, தென்னிந்தியாவின் கலாச்சாரக் காட்சிகளை உள்ளடக்கிய கொண்டாட்டமாக சாரங் திகழ்கிறது. 'திருவிழா அனுபவத்தை அனுபவிக்க விரும்பும் சாகசப் பிரியர்களுக்கான Adventure Zone அல்லது ஆர்வலர்களுக்கான ஸ்கேட்போர்டு பயிற்சியரங்கம்… இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை இடம்பெறச் செய்திருப்பதில் இத்திருவிழா பெருமை கொள்கிறது.
இக்கலாச்சார விழாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "எங்கள் கொண்டாட்டங்களின் பொன்விழாவையொட்டி விரிவான அளவில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் வளமான மற்றும் பாரம்பரியமிக்க கலாச்சாரத்திற்கு அவற்றை அர்ப்பணிக்கிறோம்" எனக் குறிப்பிட்டார். சாரங்கை பிரமாண்ட வெற்றியடையச் செய்ய சுமார் 850 மாணவர்கள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். சிறிய கலாச்சார விழாவாக ஆரம்பித்த சாரங், கடந்த 50 ஆண்டுகளில் கலைஞர்கள், மாணவர்கள், சமூகங்களுக்கு இடையே பெரிய அளவிலான சர்வதேச ஒத்துழைப்பாக உருவெடுத்து தலைமுறைகளைக் கடந்து நீண்டதூரம் பயணித்துள்ளது.
சாரங் 2024 பற்றிப் பேசிய சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணா என்.கும்மாடி, "எங்களது கலாச்சார விழாவிற்கு மாணவர்கள், பங்கேற்பாளர்கள், ஐஐடி சமூகத்தினரை அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதன்முறையாக பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற இரவை அறிமுகப்படுத்துகிறோம். பாரம்பரிய இசை, தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் ஆகிய இரண்டையும் இந்த பொன்விழா கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தவிருக்கிறோம். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாரங்' கிராமம் இந்தியாவின் வளமான, அழகான கலாச்சாரங்களின் பல்வேறு அம்சங்களை உயிர்ப்பிக்கும் அர்ப்பணிப்புப் பகுதியை வருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கும். சாரங்கின் 50-வது ஆண்டு விழாவின் வெற்றிக்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் வழிகாட்டிகள் ஆகியோரின் கடின உழைப்பும் முயற்சியும்தான் காரணம். ஒட்டுமொத்த குழுவினரின் சிறப்பான இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்தார்.
இவ்விழாவை ஏற்பாடு செய்வதற்கு மாணவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பை சுட்டிக்காட்டிய சென்னை ஐஐடி ஆலோசகர் (கலாச்சாரம்) பேராசிரியர் பி.எஸ்.வி.பிரசாத் பட்நாயக், "போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் புத்தாக்க உணர்வை மேலோங்கச் செய்கிறோம். சாரங் ஏற்பாட்டுக் குழுவினர் இவ்விழாவை மேலும் உற்சாகப்படுத்த உயர்தர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்களின் கலாச்சார செயலாளர்கள் ஜோதிர் ஆதித்ய மேனன், வலேட்டி ஸ்ரீராஜ் இருவருக்கும் பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டார்.
ஃப்ரீஸ்டைல் நடனம், புகைப்படம் எடுத்தல், அகப்பல்லா, கிராஃபிக் டிசைனிங், ஸ்டாண்ட்-அப் காமெடி போன்ற பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் ஆர்வங்களைக் கொண்டிருக்கும் வளர்ந்துவரும் இளம் கலைஞர்கள் மற்றும் நிகழ்த்துக் கலைஞர்களுக்கு சாரங் தனித்துவமானதொரு தளத்தை வழங்குகிறது. இவ்விழாவில், சொற்பொழிவு, நகைச்சுவையில் தொடங்கி நுண்கலைகள், எழுத்து, புதிதாக உருவான சமையல் கலை கிளப் வரை இக்கல்வி நிறுவனத்தின் பல்வேறு கலாச்சாரக் குழுக்களின் நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த விழாவிற்காக பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்பான்சர்ஷிப்-பிஆர் கோர் மாணவி சரண்யா கண்ணன், "மாணவர்கள் தங்களது கனவுகளை நனவாக்கும் சூழலை சாரங் உருவாக்கித் தருகிறது. படைப்பாற்றலின் புகலிடமாக இருப்பதைக் கொண்டாடும் விதமாக 'உடோப்பியா' 2024 சாரங்கின் கருப்பொருளாக இடம்பெற்றுள்ளது. எதிர்பார்ப்புகளைத் தாண்டி, கற்பனையின் எல்லைகளைக் கடந்து செல்லும் அளவுக்கு சிறந்த பொழுதுபோக்குடன் கூடிய மறுபிரவேசத்தை சாரங் உருவாக்குவதுடன், கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஐஐடி மெட்ராஸ் ஸ்பான்சர்ஷிப்-பிஆர் கோர் மாணவர் பிஎஸ் அனுபவ் கூறும்போது, "பல்வேறு திறமைகளின் சிம்பொனியாகவும், உண்மையான மயக்கும் அனுபவத்தை தருவதாகவும் சாரங் அமைந்துள்ளது. இந்த ஐந்துநாள் அதிசயத்தின் பின்னே பலமணி நேர உறுதியான அர்ப்பணிப்பு உள்ளது. பார்வையாளர்கள் தாங்கள் உணர்ந்த நினைவலைகளுடன் திரும்பிச் செல்லும்போது இந்த அணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பது உறுதி" என்றார்.
விழாவின் மகுடமாக தொழில்முறை நிகழ்வுகள் - புகழ்பெற்ற கலைஞர்கள் தொடங்கி வளரும் கலைஞர்கள் வரை பல்வேறு தரப்பினரின் நிகழ்ச்சிகள், கூடியிருக்கும் பார்வையாளர்களின் இதயங்களோடு பாட வைக்கும் என்பது உறுதி. மார்கழி மாதத்தை சிறப்பிக்கும் வகையில், இன்று 'கிளாசிக்கல் நைட்' நிகழ்வுடன் சாரங் தொடங்கும். முதல்நாள் 'கோரியோ நைட்'டில் நாடெங்கிலும் இருந்து நடனக் குழுக்கள் மேடையை அலங்கரிக்கப் போவதால் பிரமிப்பை ஏற்படுத்துவது உறுதி. டிஜே ஹோலி சி குழுவினரின் EDM நைட் தொடக்கத்துடன் மேட்டிஸ், சாட்கோ இரட்டையர்களின் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
மூன்றாம் நாளில் RJD இசைக்குழு மற்றும் 'தாய்க்குடம் பிரிட்ஜ்' குழுவினர் வழங்கும் ராக் நைட் உடன் 3 ஆம் நாள் நிகழ்ச்சிகள் முடிவடையும். கடைசி நாளன்று 'ப்ரோஷோ நைட்' நிகழ்வில் பன்முகப் பின்னணிப் பாடகர் ஃபர்ஹான் அக்தர் தலைமையில் பாப்நைட் இடம்பெறும். 'ஸ்பாட்லைட் லெக்சர் சீரிஸ்' எனப்படும் நிகழ்வு சிறப்பம்சமாக இருப்பது உறுதி. பல்வேறு கலாச்சாரக் களங்களைச் சேர்ந்த மதிப்புமிக்க பேச்சாளர்கள் பலரை வரவழைக்க சாரங் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாசர், கவுதம் வாசுதேவ் மேனன், ருக்மிணி விஜயகுமார், உஷா உதுப், மனோஜ் பாஜ்பாய் போன்ற புகழ்பெற்ற பிரபலங்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
சமூக பிரச்சாரம்: மாணவர்களின் பொறுப்புணர்வை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சாரங் பெயருடன் சமூகப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்ப் பாதுகாப்பு, மனநல விழிப்புணர்வு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை சாரங் நடத்தி வந்துள்ளது. இம்முறை 'ஊர்ஜம்' என்ற தலைப்பில் அதாவது ஆற்றல் சேமிப்பை மையமாகக் கொண்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறும் வகையில், உணர்வுமிக்க முடிவுகளை எடுக்க மக்களை ஊக்குவிப்பதே ‘ஊர்ஜம்’ பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
காலநிலை மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிந்து அவற்றில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊர்ஜம் எடுத்துரைக்கிறது. எரிபொருள், மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழியை பார்வையாளர்கள் திரும்பிச் செல்லும்போது எடுத்துச் செல்வார்கள். இதற்காக சென்னைப் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
ஆற்றல் சேமிப்பு குறித்து பல கூட்டுப் பட்டறைகள், குழு விவாதங்கள் நடத்தப்படுவதால், 'ஊர்ஜம்' பலரது வாழ்க்கையில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். சாரங்கை ஒரு அற்புதமான நிகழ்வாக மாற்ற 850 இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால், சாரங்கின் 50-வது ஆண்டு மறக்க முடியாதொரு அடையாளத்தை உருவாக்கும் என்பது நிச்சயம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT