Published : 10 Jan 2024 06:30 AM
Last Updated : 10 Jan 2024 06:30 AM
விருதுநகர்: விருதுநகர் வந்த இஸ்ரோவின் விண்வெளி அறிவியல் கண்காட்சி வாகனத்தை, முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 2,500 மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில், இஸ்ரோ அறிவியல் கண்காட்சி வாகனம் நேற்று விருதுநகர் வந்தது. ஸ்ரீசத்யசாய் வித்ய விஷினி அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தன.
விருதுநகர் சூலக்கரையில் உள்ள கே.வி.எஸ். ஆங்கிலப் பள்ளி வாகனத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளில் அறிவியலும், விண்வெளி ஆராய்ச்சியும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. இயந்திரங்கள்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை் ஏற்படுத்தியுள்ளன. மனிதனை நாகரிகப்படுத்தியதும், நவீனப்படுத்தியதும் அறிவியல்தான் என்றார்.
தொடர்ந்து, இஸ்ரோவின் விண்வெளி அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில், ராக்கெட் மாதிரிகள், ரோகினி, ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற செயற்கைக்கோள்களின் மாதிரிகள், விகாஸ் என்ஜின் மாதிரி, ராக்கெட் ஏவுதள மாதிரி, வின்வெளியில் செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதை விளக்கம், பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்கள் மாதிரி, சந்திரயான் செயற்கைக்கோள் மாதிரி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, இஸ்ரோவின் முதுநிலை விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: இஸ்ரோவின் கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளவும், விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டவும், அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 3 லட்சம் மாணவர்கள் இதை பார்த்துள்ளனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று இக்கண்காட்சியை பார்வையிடுவது இதுவே முதல்முறை. மேலும், இந்த கண்காட்சி வாகனம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT