Last Updated : 09 Jan, 2024 04:28 PM

1  

Published : 09 Jan 2024 04:28 PM
Last Updated : 09 Jan 2024 04:28 PM

அஞ்செட்டி அருகே தடுப்புச் சுவர் இல்லாத அங்கன்வாடி மையம்: கேள்விக்குறியாகும் குழந்தைகளின் பாதுகாப்பு

அஞ்செட்டி அருகே கேரட்டி கிராமத்தில் சாலையோரம் தடுப்புச் சுவர் இல்லாத அங்கன்வாடி மையத்தின் முன்பு விளையாடும் குழந்தைகள்.

ஓசூர்: அஞ்செட்டி அருகே கேரட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள அங்கன்வாடி மையத்துக்குத் தடுப்புச் சுவர் இல்லாததால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நாட்றாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கேரட்டி கிராமத்தில் ஒகேனக்கல் செல்லும் சாலையை யொட்டி பழமையான கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

பழமையான இக்கட்டிடத்தின் சுவர் வலுவிழந்து, மேற்கூரை சேதமாகி, மழை நேரங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் கசிந்து சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், அங்கன்வாடி மையம் ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையையொட்டி இருக்கும் நிலையில், மையத்துக்குச் சுற்றுச்சுவர் இல்லை. தற்காலிகமாக கம்பி வலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இத்தடுப்பு குழந்தைகள் வெளியில் வராமல் தடுக்க மட்டுமே உதவும். சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், வாகனங்களால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

பராமரிப்பின்றி, பாழ்பட்டுள்ள அங்கன்வாடி மைய கழிப்பறை.

இதுதொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது: ஒகேனக்கல் சாலைக்கும், அங்கன்வாடி மையத்துக்கும் இடையில் இடைவெளி 10 அடி தூரத்துக்கும் குறைவாகவே உள்ளது. அங்கன்வாடி மையத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால் கிராம மக்கள் சார்பில் தற்காலிகமாக இரும்பு வலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கன்வாடி மையத்தின் சுவர் வலுவிழந்த நிலையில் உள்ளது. இங்குள்ள கழிப்பறை முறையான பராமரிப் பின்றி உள்ளது. இதனால், குழந்தைகள் இயற்கை உபாதைகள் கழிக்கச் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மையத்தில் மின் வசதியில்லாததால், இருட்டில் குழந்தைகளுக்குச் சமையல் செய்யும் நிலையுள்ளது.

எனவே, குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதிஅங்கன்வாடி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது அனைத்து அடிப்படை வசதிகளுடன் அங்கன்வாடி மையம் புதிதாகக் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x